2017-ஆம் ஆண்டில் கவனிக்க வேண்டிய முக்கிய நிகழ்வுகள் !

ஜனவரி - 2017
இந்தியா

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 'வைப்ரன்ட் குஜராத்' மாநாடு துவக்கம்
இந்தியா மற்றும் அயல்நாடுகளில் உள்ள 'பார்ச்சூன் 500' தர நிலை கம்பெனிகள் பங்குபெறும் 'வைப்ரன்ட் குஜராத்' மாநாடு ஜனவரி 10 தொடங்கி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறுகிறது. மாநாட்டிற்கு தலைமை தாங்கும் பிரதமர் மோடி அக்கம்பெனிகளின் தலைமை செயல் அதிகாரிகளுடன் வட்ட மேசை சந்திப்பிலும் பங்கு பெறுகிறார்.
ஒரே சமயத்தில் 83 செயற்கைகோள்களை விண்ணில் ஏவும் இஸ்ரோ!
இஸ்ரேல், கஜகிஸ்தான், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்கா என ஐந்துநாடுகளின் 80 செயற்கைகோள்கள் மற்றும் இந்தியாவின் 3 செயற்கைகோள்கள் என மொத்தம் 83 செயற்கைகோள்களை ஒரே சமயத்தில் இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.
மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கும் 3 சதவீத அகவிலைப்படி
இவ்வருடம் செப்டம்பர் 2016 சமயத்தில் மத்திய அரசுஅறிவித்த அறிவித்த 2 சதவீத அகவிலைப்படியில் திருப்தியடையாத மத்திய அரசு ஊழியர்கள், இந்த முறை மத்திய அரசு 3 சதவீத அகவிலைப்படி அறிவிக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்தபடியுள்ளனர்.
23-ஆவது ட்ரீம்லைனர் விமானத்தை பெறப்போகும் ஏர் இந்தியா!
மேலாண்மையில் சில தொழில் நுட்பக்க குறைபாடுகள் இருந்த போதிலும், வரும் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் 27 ட்ரீம்லைனர் விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் இறக்குமதி செய்ய உள்ளது. அதில் 23-ஆவது விமானமானது இந்த மாத துவக்கத்தில் வந்து சேரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
சி.பி.எஸ்.இ பள்ளிகளில் நடைமுறைக்கு வரும் 'பணமில்லா பரிவர்த்தனை'
பணமில்லா பரிவர்த்தனை செயல்பாட்டில் ஈடுபட வேண்டும் என்ற பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் ஜனவரி முதல் பள்ளிக்கட்டணங்கள் ரொக்கமாக வாங்கப்பபடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகம்
விலை உயரும் நிசான் டாட்சன் வகை கார்கள்
மூலப்பொருட்களின் விலையேற்றத்தை தொடர்ந்து நிசான் மற்றும் டாட்ஸன் வகை கார்களின் விலை வரும் ஆண்டு முதல் உயர்த்தப்படும் என்று அக்கம்பெனி அறிவித்துள்ளது.
ஹோண்டா கம்பெனி கார்களின் விலையேற்றம்
வருட இறுதியில் அடுத்த ஆண்டுக்கான விலை பரிசீலனை செய்யும் கார் கம்பெனிகளின் நடைமுறைக்கு ஏற்ப ஹோண்டா கம்பெனியும் தன்னுடைய அனைத்து வகை மாடல்களிலும் 3% சதவீத விலை உயர்வை வரும் ஆண்டு முதல் அறிவித்துள்ளது.
பிம்ஸ்டெக் - சார்க் நாடுகளின் பெண்களுக்கான பொருளாதார சபை கூட்டம்
அசோசம் அமைப்பானது மத்திய வெளியுறவுத் துறையுடன் இணைந்து ஜனவரி 13-ஆம் தேதி அன்று பிம்ஸ்டெக் - சார்க் நாடுகளின் பெண்களுக்கான பொருளாதார சபை கூட்டத்தை தில்லியில் நடத்த உள்ளது.
பிப்ரவரி 2017
இந்தியா
மத்திய பட்ஜெட் தாக்கல்
மாற்றம் செய்யப்பட்டுள்ள முறைப்படி வரும் ஆண்டு முதல் பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
அரசு சாரா அமைப்புகளுக்கு அனுமதி
வெளி நாட்டில் இருந்து நிதி உதவி பெறுவதற்கான அனுமதி காலாவதியான 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு சாரா அமைப்புகளில், 800-க்கும்மேற்பட்ட அமைப்புகள் ஆவணங்களை சரிபார்த்து மறு தாக்கல் செய்ய இந்த மாத இறுதி வரை அவகாசம் அளிக்கபட்டுள்ளது.
கட்சியினருக்கு நாடு தழுவிய அளவில் பயிற்சி வகுப்பு நடத்தும் பாஜக!
எல்லா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த தலைவர்களுக்கு கட்சியின் அடிப்படைக் கொள்கைகள் குறித்த ஐந்து நாள் பயிற்சி வகுப்புகளை தில்லியில் பாஜக நடத்த உள்ளது.
சர்வதேசம்
எகிப்தில் சர்வதேச பெட்ரோலியத் துறை கண்காட்சி
இருபதிற்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து, 400-க்கும் மேற்பட்ட பெட்ரோலியத்துறை கம்பெனிகள், 10000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்குபெறும் EGYPS - 2017 என்னும் சர்வதேச பெட்ரோலியத் துறை கண்காட்சி எகிப்து தலைநகர் கெய்ரோவில் பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
89-ஆவது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா
உலக அளவில் புகழ்பெற்ற 89-ஆவது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா இம்மாதம் பிபரவரி 26-ஆம் தேதி நடைபெற உள்ளது. பிரபல நகைச்சுவை நடிகர் ஜிம்மி கிம்மல் இந்நிகழ்வினை தொகுத்து வழங்க உள்ளார்.
வர்த்தகம்
இந்திய சர்வதேச நகைக்கண்காட்சி விழா
ஜெம் மற்றும் நகைகள் ஏற்றுமதி வளர்ச்சி கழகம் நடத்தும் 10-ஆம் ஆண்டு இந்திய சர்வதேச நகைக்கண்காட்சி விழா, இம்மாதம் 7-ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் மும்பையில் நடைபெற உள்ளது.
இந்திய மருந்துகள் கண்காட்சி மற்றும் மாநாடு
இந்திய மருந்துகள் துறை மற்றும் 'பிக்கி' அமைப்பு இணைந்து நடத்தும் இரண்டாவது இந்திய மருந்துகள் கண்காட்சி மற்றும் மாநாடு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிபரவரி 11 ஆம் தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
'நமஸ்கார் ஆப்பிரிக்கா' தொழில்துறை முன்னேற்ற நடவடிக்கை
இந்தியாவின் 'பிக்கி' அமைப்பானது மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்துடன் இணைந்து 'நமஸ்கார் ஆப்பிரிக்கா' தொழில்துறை முன்னேற்ற நடவடிக்கை மாநாட்டினை இம் மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் நடத்த உள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் மின்துறை வாய்ப்புகள் கண்காட்சி - 2017
இந்திய தொழில் முனைவோர்களுக்கு மத்திய கிழக்கு மற்றும் ஒருங்கிணைந்த அரபுக் குடியரசு நாடுகளில் உள்ள மின்துறை சார்ந்த வாய்ப்புகளை எடுத்துக் காட்டும் விதமாக "மத்திய கிழக்கு நாடுகளில் மின்துறை - 2017" கண்காட்சியானது, பிப்ரவரி 14 அன்று துபாயில் நடைபெற உள்ளது.
இஸ்போ பீஜிங் 2017
ஆடை அலங்கார துறை சார்ந்த வர்த்தக கண்காட்சிகளை நடத்தி புகழ் பெற்ற இஸ்போ நிறுவனமானது, வரும் ஆண்டு சீனாவின் பீஜிங்கில், பிபரவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் 'இஸ்போ பீஜிங் 2017' என்னும் பெயரில் தொழில் நிறுவனங்களுக்கான, விளையாட்டு பொருள் கண்காட்சியை நடத்த உள்ளது.
இந்தியா மருத்துவ சுற்றுலா பிரதேசம் - 2017
மருத்துவ சிகிச்சைகளுக்காக இந்தியாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டும், அவர்களுக்கு இருக்கக் கூடிய வசதிகளைப் பற்றி தெரிய வைக்கும் பொருட்டும், இந்தியா மருத்துவ சுற்றுலா பிரதேசம் - 2017' என்னும் கருத்தரங்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் தலைநகரான ஏடிஸ் அபாபாவில் நடைபெற உள்ளது. இது பிப்ரவரி 16 மற்றும் 17 ஆகிய இரு தேதிகளில் நடைபெறுகிறது.
டேட்டா க்ளவுட் ஏசியா 2017
ஐரோப்பாவில் 'க்ளவுட்' தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இயங்கும் கணினி வலைப்பின்னல் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இடையே பாலமாக விளங்கும் டேட்டா க்ளவுட் சபையானது ஆசியாவில் தனது காலடித்தடத்தைப் பதிக்கும் பொருட்டு, 'டேட்டா க்ளவுட் ஏசியா 2017' என்னும் மாநாட்டை இம்மாதம் 23-ஆம் தேதி அன்று சிங்கப்பூரில் நடத்துகிறது.
உலக மொபைல் காங்கிரஸ் மாநாடு
மொபைல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள உலகளாவிய வளர்ச்சி குறித்து கலந்து பேசும் சர்வதேச 'உலக மொபைல் காங்கிரஸ் மாநாடு' ஸ்பெயினின் பார்சிலோனாவில் அமைந்துள்ள பிரா கிரான்வியாவில், பிப்ரவரி 27 முதல் மார்ச் 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
ITTF உலக டேபிள் டென்னிஸ் போட்டி
தில்லியில் முதன்முறையாக சர்வதேச டேபிள் டென்னிஸ் ஆணையத்தின் டேபிள் டென்னிஸ் போட்டித் தொடர் நடைபெற உள்ளது. பிபரவரி 16 முதல் 19 வரை நடைபெற உள்ள இந்த போட்டிக்கு பரிசுத்தொகை இந்திய ரூபாய் மதிப்பில் 80 லட்சமாகும்.
விளையாட்டு
அனைத்துலக குத்துச்சண்டை அமைப்பின் குழு கூட்டம்
ஏகப்பட்ட சர்ச்சைகளுக்கு பிறகு இந்தியாவில் குத்துச்சண்டை ஆணையம் உண்டாக்கப்பட்ட பிறகு, இந்த ஆண்டு, அனைத்துலக குத்துச்சண்டை அமைப்பின் 71-ஆவது குழு கூட்டம் தில்லியில் நடைபெற உள்ளது.
மார்ச் 2017
இந்தியா
வரி ஏய்ப்பு செய்வோருக்கு இறுதி அவகாசம்
முறையாக வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்வோர் நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ள தானாக முன்வந்து அறிவிக்கும் திட்டத்தின் படி, கணக்குகளை தாக்கல் செய்ய இம்மாத இறுதி வரைதான் அவகாசம் உள்ளது. அதன் பிறகு கண்டுபிடிக்கப்படுவோர் 77 முதல் 100 சதவீதம் வரை வரியும் அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும்.
ஒடிசாவில் மின்சார வசதி பெரும் கிராமங்கள்
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் அறிவித்துள்ள திட்டத்தின்படி அங்குள்ள கிராமங்கள் அனைத்தும் இம்மாத இறுதிக்குள் முழுமையாக மின்சார வசதி பெறும் இன்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து மாநில இடைத்தேர்தல்?
பிப்ரவரி மாதத்தின் இரண்டாம் வாரத்திலிருந்து மார்ச் மாத இறுதிக்குள் உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் இம்மாதம் பஞ்சாயத்து தேர்தல்கள்
ஜம்மு காஷ்மீரில் கடந்தஆண்டு நிலவிய அமைதியற்ற சூழல் காரணமாக நடக்கவிருந்த பஞ்சாயத்து தேர்தல்கள் இம்மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாக்பூரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை
அதி நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை கிளையொன்றை நாக்பூரில் உருவாக்குவதற்கான கட்டுமானப் பணிகள் இம்மாதம் துவ ங்க இருக்கின்றன.
மேலும் 10 லட்சம் 'பி.ஓ .எஸ்' எந்திரங்கள்
பிரதமர் மோடியின் கனவான மின்னணு பணப்பரிவர்த்தனை செயல்பட்டை விரிவாக்கும் முயற்சியாகவும், பணமில்லா பொருளாதாரம் என்னும் இலக்கை நோக்கி நகரும் பயணமாகவும், நாடெங்கும் மேலும் பத்து லட்சம் புதிய 'பாய்ண்ட் ஆப் சேல்' இயந்திரங்களை இம்மாத இறுதிக்குள் நிறுவ வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சி.பி.எஸ்.ஈ தேர்வுகள்
மத்திய அரசின் சி.பி.எஸ்.ஈ வாரிய 12-ஆம்வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி இறுதி வாரத்திலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ நடைபெறும்.
சர்வதேசம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு
பாகிஸ்தான் நாட்டின் ஆறாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் மார்ச் மாதம் 15-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வர்த்தகம்
INTERPHEX -2017
இந்தியாவின் 'பிக்கி'அமைப்பானது மத்தியத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்துடன் இணைந்து INTERPHEX -2017 என்னும் தொழில் வர்த்தக கண்காட்சியை அமெரிக்காவின் நியூயார்க்கில் இம்மாதம் 21-ஆம் தேதி அன்று நடத்த உள்ளது.
சுற்றுலா மாநாடு
இந்தியாவில் முதன்முறையாக பயணம், சுற்றுலா, உபசரிப்பு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் தொடர்பான மாநாடு தில்லியில் மார்ச் 22-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.
விளையாட்டு
மும்பையில் அம்மாநில அரசால் நடத்தப்படும் சர்வதேச பவர்போட் (P 1 ரேஸிங்) போட்டிகள், அரபிக் கடலின் மரைன் ட்ரைவ் பகுதியில் மார்ச் 3-ஆம் தேதி முதல் நடத்த ப்பட உள்ளது.
யோனெக்ஸ் சன்ரைஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி
தில்லியின் சிரி போர்ட் உள் விளையாட்டு அரங்கத்தில் மார்ச் 28-ஆம் தேதி முதல் யோனெக்ஸ் சன்ரைஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டித் தொடர் நடைபெற உள்ளது.
போலோ லீக் துவக்கம்
இந்தியாவின் முதல் போலோ லீக் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மார்ச் மாதத்திலிருந்து துவங்கி நடைபெற உள்ளது.
பொழுதுபோக்கு
'வைஸ்ராய்'ஸ் ஹவுஸ்' திரைப்படம் வெளியீடு
இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்காலத்தின் இறுதி நாட்களை பற்றி கூறும் திரைப்படமான 'வைஸ்ராய்'ஸ் ஹவுஸ்' மார்ச் 3-ஆம் தேதி வெளியாகிறது. இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இங்கிலாந்து இயக்குனர் குரீந்தர் சத்தா இயக்கியுள்ள இப்படத்தை ரிலையன்ஸ் என்ட்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஏப்ரல் 2017
இந்தியா
கொல்கத்தாவில் தொலைத்தொடர்பு கருவி கண்காட்சி
அலைபேசி மற்றும் தொலைத்தொடர்பு கோபுரங்களில் பயன்படும், வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தொலைத்தொடர்பு கருவிகளின் கண்காட்சி கொல்கத்தாவில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இக்கண்காட்சி நெடுங்காலமாக தள்ளி வைக்கப்பட்டுக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
குளிர் சாதன வசதியுடன் கூடிய ட்ரக் கேபின்கள் அறிமுகம்
மத்திய சாலை போக்குவரத்து துறையின் வழிகாட்டுதலின்படி இந்த மாதம் முதல் இந்தியாவில் தயாரிக்கப்படும் ட்ரக்குகளில் ஓட்டுநர் கேபின்கள் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமாகிறது. ஓட்டுநர்களை இயற்கை சூழ்நிலைகளில் இருந்து காக்கவே இந்த நடவடிக்கை கட்டாயமாக்கப்படுகிறது.
வளர்ச்சிப் பாதையில் இந்திய பொருளாதாரம்
பணமதிப்பு நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து இந்திய பொருளாதாரம் இந்த மாதத்திலிருந்து வளர்ச்சிப்பாதையில் செல்லத் துவங்கும் என்று பிரபல தணிக்கை மதிப்பீட்டு நிறுவனமான மார்கன் ஸ்டான்லி அறிவித்துள்ளது.
சர்வதேசம்
ஏசியா பசிபிக் நாடுகளுக்கான சர்வதேச கூட்டுறவு மாநாடு
ஏசியா பசிபிக் நாடுகளுக்கான சர்வதேச கூட்டுறவு அமைப்பின் அமைச்சர்கள் பங்கு கொள்ளும் பத்தாவது மாநாடு, இந்த ஆண்டு மார்ச் மாதம் 18-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை வியட்நாமின் ஹனோயில் நடைபெற உள்ளது.
மே 2017
சர்வதேசம்
போர்ச்சுகலில் உள்ள புனித பாத்திமா ஆலய நூற்றாண்டு விழாவில் பங்கேற்கும் போப்
போர்ச்சுகலில் மூன்று ஆடு மேய்க்கும் சிறுவர்களுக்கு புனித கன்னி மேரி காட்சியளித்த இடத்தில் கட்டப்பட்டுள்ள புனித பாத்திமா ஆலயத்தின் நூற்றாண்டு விழா மே 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது. இந்த நிகழ்வில் போப் பிரான்சிஸ் பங்கேற்கிறார்.
விளையாட்டு
ரக்பி உலகக் கோப்பைக்கான அணிகளின் பிரிவு குலுக்கல் முறை தேர்வு
ஆசிய கண்டத்தில் முதல்முறையாக 2019-ஆம் ஆண்டுக்கான ரக்பி உலகக் கோப்பை போட்டிகள் ஜப்பானின் க்யோடோவில் நடைபெற உள்ளது. இதில் பங்கு பெறும் அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட உள்ளன. அதில் எந்த குழுவிவில் எந்தெந்த அணிகள் இடம் பெறும் என்பதை தேர்வு செய்யும் குலுக்கல் மே 10-ஆம் தேதி அன்று க்யோடோவில் நடைபெறும்.
பொழுதுபோக்கு
பிரியும் நட்சத்திர தம்பதி
நட்சத்திர தம்பதிகளான மலைக்கா அரோரா மற்றும் அர்பாஸ் கான் ஆகிய இருவரும் 18 ஆண்டு கால மண வாழ்க்கைக்கு பிறகு, தற்போது விவாகரத்தை எதிர் நோக்கியுள்ளனர். நீதிமன்ற உத்தரவுப்படி அவர்களுக்கு இடையேயான முதல் ஆலோசனை நிகழ்வு முடிந்த பின்னர், இம்மாதம் 11-ஆம் தேதியன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
ஜூன் 2017
இந்தியா
'நீட்' தேர்வு
மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான 'தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு' ஜூன் 10-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் பல மையங்களில் நடைபெறும்.
விளையாட்டு
ஹாக்கி உலக லீக் - 2017 அரையிறுதி போட்டிகள்
சர்வதேச ஹாக்கி சம்மேளனம் நடத்தும் ஹாக்கி உலக லீக் - 2017 அரையிறுதி போட்டிகள் ஜூன் மாதம் 15-ஆம் தேதியிலிருந்து லண்டனில் நடைபெறும்
இந்தியா A அணியின் தென் ஆப்பிரிக்க பயணம்
ராகுல் திராவிட்டின் மேற்பார்வையில் இந்தியா A அணியானது இம்மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது.
ஜுலை 2017
சர்வதேசம்
குற்ற விசாரணை
ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக பதவி விலகிய தாய்லாந்தின் முதல் பெண் பிரதமர் யிங்லுக் சினவத்ரா மீதான குற்ற அலட்சிய விசாரணை இம்மாத இறுதியோடுமுடிவடைகிறது. மிக விரைவில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.
ஆகஸ்ட் 2017
இந்தியா
தில்லி விரைவுச்சாலை
ரூபாய் 15000 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் தில்லியின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் விரைவுச்சாலையானது இம்மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது.
சர்வதேசம்
ரூவாண்டா தேர்தல்
ஆப்பிரிக்க நாடான ரூவாண்டாவில் புதிய அதிபரை தேர்தெடுப்பதற்கான தேர்தல் இம்மாதம் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது.
உக்ரைனை ஊடறுத்து செல்லும் இருப்புப்பாதை
உக்ரைனை இரண்டாக ஊடறுத்து செல்லும் அந்நாட்டின் மிக நீண்ட இருப்புப் பாதையானது ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வருகிறது.
செப்டம்பர் 2017
இந்தியா
வருகிறது ஜி.எஸ்.டி
அரசியல் சட்ட நடைமுறைகளின் படி நாடு முழுவதும் பொருட்கள் மற்றும் சேவை வரி விதிப்பை செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதிக்கு முன்னதாக அமல் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.
வர்த்தகம்
ஆசிய கண்டத்தில் ஜவுளித்தொழில் துறையில் அடைந்துள்ள வளர்ச்சி குறித்து அறிந்து கொள்ள உதவும் 'டெக்ஸ்கேர் ஏசியா' என்னும் சர்வதேச வியாபார கண்காட்சி, இம்மாதம் 27-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற உள்ளது.
அக்டோபர் 2017
இந்தியா
நிலவுக்கு விண்கலம் அனுப்ப தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம்
நிலவுக்கு தனி விண்கலம் அனுப்பும் திட்டத்திற்காக டீம் இண்டஸ் என்ற தனியார் நிறுவனமானது , இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோவுடன் ஒப்பந்தம் போட உள்ளது. மேலும் இம்மாத இறுதியில் ரூ.27 கோடி நிதி திரட்டவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அருணாச்சல பிரதேசத்தில் புதிய நீர் மின்சக்தி திட்டம்
அருணாச்சல பிரதேசத்தின் போம்டிலா பகுதியில் அமைந்துள்ள பிச்சோம் அணைப்பகுதியில் 600 மெகா வாட் மின்சக்தியை உற்பத்தி செய்யும் கமெங் நீர் மின்சக்தி திட்டமானது இம்மாதத்தில் செயல்படுத்த தொடங்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
தில்லியில் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டி
சர்வதேச துப்பாக்கி சுடும் விளையாட்டு சம்மேளனத்தின் சார்பாக சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டித்தொடரின் இறுதிப்போட்டிகள் தில்லியில் இமாதம் நடைபெற உள்ளது.
ஊழல் விசாரணை
'பிபா' எனப்படும் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தில் நடந்த நிதி முறைகேடுகள் தொடர்பான நீதிவிசாரணை இம்மாதம் துவங்க உள்ளது.
கொல்கத்தாவில் சர்வதேச கால்பந்து போட்டி
'பிபா' மூலம் நடத்தப்படும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து போட்டி அக்டோபர் 6-ஆம் தேதி துவங்கி 28-ஆம் தேதி வரை கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.
நவம்பர் 2017
இந்தியா
திறந்த வெளி கழிப்பிடங்கள் இல்லாத 200 மாவட்டங்கள் இலக்கு
நாடு முழுவதும் திறந்த வெளி கழிப்பிடங்கள் என்பதே இல்லாத 200 மாவட்டங்களை உருவாக்குவதை இலக்காக கொண்டு பிரதமரின் 'ஸ்வச் பாரத்' திட்டம் செயல்பட்டு வருகிறது. உலக கழிப்பறை தினமான நவம்பர் 19-ஆம் தேதிக்கு முன்பாக இதனை நிறைவேற்ற வேண்டும் என்பதும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாக்பூரில் 'ஆப்பிரிக்கன்' சபாரி
நாக்பூரில் அமைந்துள்ள கோர்வாடா வனவிலங்கு சரணாலாயத்தில் இந்தியா மற்றும் ஆப்பரிக்கன் சபாரி எனப்படும் சுற்றிப்பார்க்கும் திட்டங்களை இம்மாத இறுதிக்குள் செயல்படுத்த வேண்டுமென அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.
ஹைதராபாத்தில் உலகின் இரண்டாவது உயரமான ராமானுஜர் சிலை
தமிழநாட்டைச் சேர்ந்த ஆன்மிக மற்றும் சமூக ஞானியான ராமானுஜரின் சிறப்பை போற்றும் வகையில் ஹைதராபாத்தில் 1000 கோடி செலவில், அமர்ந்த நிலையில் உள்ள அவரது 216 அடி உயர பஞ்சலோக சிலை நிறுவப்பட உள்ளது.
விளையாட்டு
வருகிறது நெக்ஸ்ட் ஜென் டென்னிஸ் போட்டிகள்
டென்னிஸ் போட்டிகளில் தங்களது திறமையை காட்ட விரும்பும் அடுத்த தலைமுறை இளைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, ஏ.டி.பி அமைப்பு சார்பில் லண்டனில் ஏ.டி.பி நெக்ஸ்ட் ஜென் டென்னிஸ் போட்டிகள் இம்மாதம் 7-ஆம் தேதி துவங்கி 11-ஆம் தேதி வரைநடைபெற உள்ளன.
டிசம்பர் 2017
சர்வதேசம்
சமகால கலை மையம்
அமெரிக்காவின் மியாமியில் அமைந்துள்ள சமகால கலைகளுக்கான மையமானது அங்குள்ள மியாமி டிசைன் மாவட்டத்தில் நிரந்தர கட்டிடத்தில், டிசம்பர் 1 முதல் செயல்படத் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலம்-ஜீலம் நீர் மின்சத்தி திட்டம்
பாகிஸ்தானின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான நிலைக்குழுவானது, பஞ்சாப் மாகாணத்திலமைந்துள்ள நீலம்-ஜீலம் நீர் மின்சத்தி திட்டமானது இம்மாத இறுதிக்குள் செயல்படத் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
பகல் இரவு 'ஆஷிஸ்' போட்டி
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கும் புகழ் பெற்ற 'ஆஷிஸ்' கிரிக்கெட் போட்டிகளில் முதன்முறையாக பகல் இரவு டெஸ்ட் போட்டியானது அடிலெய்டு ஓவல் மைதானத்தில் டிசம்பர் 2 முதல் 6-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.