ரேஷன் கார்டில் உள் தாள் ஜன., 1ல் ஒட்டும் பணி

ரேஷன் கார்டில், உள் தாள் ஒட்டும் பணி, ஜன., 1ல் துவங்குகிறது. தமிழக அரசு, பழைய ரேஷன் கார்டுக்கு பதில், 'ஸ்மார்ட்' கார்டு வழங்க உள்ளது. இதற்காக, ரேஷன் கார்டுதாரரிடம் இருந்து, 'ஆதார்' விபரம் வாங்கப்படுகிறது. ஆனால், பலர் ஆதார் விபரம் தராமல் உள்ளனர். ரேஷன் கார்டின் செல்லத்தக்க காலம், டிச., 31ல் முடிகிறது. இதனால், வழக்கம் போல், அவற்றில், உள் தாள் ஒட்டி, செல்லத்தக்க காலத்தை நீட்டிப்பதாக, அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ரேஷன் கடைகளில் உள் தாள் ஒட்டும் பணி, ஜன., 1ல் துவங்க உள்ளது. 

இது குறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை, விருத்தாசலம், திருச்சி, புதுக்கோட்டை, சேலம், மதுரை ஆகிய இடங்களில் உள்ள அரசு அச்சகங்களில், ரேஷன் உள் தாள் அச்சிடும் பணி நடக்கிறது. அவை, உடனுக்குடன், கலெக்டர் அலுவலகம் வழியாக, ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும். ஒரு கடையில், ஒரு நாளைக்கு, 100 கார்டுகள் என, ஜன., 1 முதல், உள் தாள் ஒட்டும் பணி துவங்கும். ரேஷனில், ஆதார் விபரம் வாங்கும் பணியும் தொடர்ந்து நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.