110 விதியின் கீழ் வெளியான அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிட வேண்டும்: அரசு ஊழியர் சங்கம்

முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, 110 விதியின் கீழ் வெளியான அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.தமிழ்ச்செல்வி வலியுறுத்தினார்.

கடலூர் வில்வராயநத்தத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கடலூர் மாவட்ட அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ஆர்.தமிழ்ச்செல்வி சங்க அலுவலகத்தை திறந்து வைத்தார். என்.வேலு அரங்கத்தை மாநில பொதுச் செயலர் ஆர்.பாலசுப்ரமணியன் திறந்து வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ், மாவட்ட எஸ்பி செ.விஜயகுமார் ஆகியோர் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றினர்.

விழாவில் ஆர்.தமிழ்ச்செல்வி பேசியதாவது: இந்தக் கட்டடம் மக்கள் சேவை மையமாகவும், வேலைவாய்ப்பு பயிற்சி மையமாகவும் செயல்படும்.
முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, 110 விதியின் கீழ் வெளியான அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிட வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், ஊராட்சி செயலர்கள், நூலகர்கள் உள்ளிட்ட 2.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறுகின்றனர். இவர்களுக்கு இடைக்கால நிவாரணம் அளித்து, காலமுறை ஊதியத்துக்குள் கொண்டு வர குழுவினை உருவாக்க வேண்டும்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான வழிமுறைகளை, 14 பக்க அறிக்கையாக அரசுக்கு சங்கத்தின் சார்பில் அளித்துள்ளோம்.
இதனை முதல்வர் நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் காலிப் பணியிடங்கள் லட்சக்கணக்கில் உள்ளன.
இந்த பணியிடங்கள் நிரப்பப்படாத காரணத்தால் சமூகநீதி மறுக்கப்பட்டுள்ளது. கருணை அடிப்படையிலான பணியிடங்களை உடனுக்குடன் நிரப்ப வேண்டும். இனி மக்களோடு நின்று ஆட்சியாளர்களின் அநீதி மற்றும் முறைகேடுகளுக்கு எதிராகப் போராடுவோம் என்றார் தமிழ்ச்செல்வி.
அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத் தலைவர் ஆர்.முத்துசுந்தரம் சிறப்புரையாற்றினார். சிஐடியு மாவட்டச் செயலர் பி.கருப்பையன், வங்கி ஊழியர் சங்க மாநில முன்னாள் துணைத் தலைவர் எம்.மருதவாணன், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க கோட்டச் செயலர் டி.மணவாளன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கச் செயலர் கே.டி.சம்பந்தம் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
முன்னதாக மாவட்டச் செயலர் என்.காசிநாதன் வரவேற்றக, பொருளர் கே.சதீஷ்குமார் நன்றி கூறினார்.