10ம் வகுப்பு தேர்வு நேரம் மாற்றுமா தமிழக அரசு?

'பத்தாம் வகுப்பு தேர்வு நடக்கும் நேரத்தை, மாற்ற வேண்டும்' என, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 2; 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 8ல், துவங்க உள்ளது. பிளஸ் 2 தேர்வு, காலை, 10:00 முதல் பகல், 1:15 மணி வரையும்; 10ம் வகுப்பு தேர்வு, காலை, 9:15 முதல் நண்பகல், 12:00 மணி
வரையும் நடக்கிறது. பத்தாம் வகுப்பு தேர்வுக்கு, காலை, 9:15 மணிக்கு தேர்வறையில் இருக்க வேண்டும் என்றால் மாணவர்கள், காலை, 8:30 மணிக்கே, பள்ளிக்கு வர வேண்டும். அவர்களுக்கு சோதனை நடத்தி, வகுப்பறையில் அமர வைக்க, 9:15 மணியாகி விடும். எனவே, 10ம் வகுப்பு தேர்வையும், காலை, 10:00 மணிக்கே துவங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன் கூறியதாவது: பத்தாம் வகுப்புக்கு, காலை, 9:15 மணிக்கு தேர்வு நடத்தும் முறை, 2014ல், அறிமுகமானது. அதற்கு, காலை, 8:30 மணிக்கே மாணவர்கள், பள்ளிக்கு வர வேண்டும். நகர பகுதியில் இருந்து, வெகு துாரத்தில் உள்ள கிராமங்கள் மற்றும் மலை கிராம மாணவர்கள், காலை, 7:00 மணிக்கே, வீடுகளில் இருந்து புறப்பட்டால் தான், உரிய நேரத்தில் பள்ளிக்கு வர முடியும். ஆனால், பல கிராமங்களில் இருந்து, அதிகாலையில் பஸ் வசதி இல்லை. மேலும், காலை உணவு சாப்பிட முடியாமல், மாணவர்கள் பட்டினியுடன் தேர்வுக்கு வரும் சூழல் உள்ளது. அதனால், அவர்களில் பலர், சரியாக தேர்வு எழுத முடிவதில்லை. எனவே, 10ம் வகுப்பு தேர்வு நேரத்தை, காலை, 10:00 மணியாக மாற்ற வேண்டும். இதற்கான அறிவிப்பை, அவசரமாக வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.