வங்கிக் கணக்கில் வார வரம்பு தொகை இன்று தொடக்கம்

வங்கிகளில் வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்புக் கணக்கில் அதிகபட்சம் ரூ.24,000 பணம் எடுப்பதற்கான இந்த வார வரம்பு வியாழக்கிழமை (நவ.24) தொடங்குகிறது.

இந்த வார வரம்பு கெடு வரும் நவ. 30-ஆம் தேதி நிறைவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதாவது, முதல் நாளன்றே (வியாழக்கிழமை-நவ.24) ஒரு வாடிக்கையாளர் தனது சேமிப்புக் கணக்கிலிருந்து காசோலைக்கோ அல்லது படிவத்துக்கோ ரூ.24,000 எடுத்துவிட்டால், வரும் 30-ஆம் தேதி வரை தனது கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியாது.

எனினும் ஏடிஎம் மையத்தில், வங்கிக் கணக்கில் என ஒருவர் தேவைக்கேற்ப பணம் எடுக்கும் நிலையில், எடுத்த தொகை போக அதிகபட்சம் ரூ.24 ஆயிரம் மட்டுமே வார வரம்பு கெடு நாள் (நவ.30) வரை வங்கியில் எடுக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரேஷனில் பண விநியோகம்: வங்கிக் கணக்கில் ஒரு வாடிக்கையாளர் அதிகபட்சம் ரூ.24,000 எடுக்கலாம் என்றாலும், வங்கிகளுக்கு போதிய பணம் அளிக்கப்படாத நிலை தொடர்வதால் ஒரு வாடிக்கையாளருக்கு நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.10,000 மட்டுமே அளிக்கப்படுகிறது என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதே போன்று நடப்புக் கணக்கு உள்ளிட்ட கணக்கு வைத்துள்ளோருக்கான அதிகபட்ச தொகை ரூ.50,000 நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், பணம் இருப்பதைப் பொருத்து குறைவான அளவே அளிக்கப்படுகிறது என்று அதிகாரிகள் கூறினர்.