தி இந்து : அரசு ஊழியர்களுக்கு முன்பணம்: வரவேற்புக்குரிய யோசனை!

உயர் மதிப்புப் பணநீக்க நடவடிக்கையின் தொடர்ச்சியாக, அரசு ஊழியர்களுக்கு அவர்களுடைய சம்பளத்திலிருந்து ரூ.10,000 ரொக்கமாக
முன் பணம் வழங்கும் யோசனை வரவேற்புக்குரியது.
பிரதமர் மோடியின் நவம்பர் 8 அறிவிப்பைத் தொடர்ந்து, நாட்டில் தற்காலிகமான ஒரு பொருளாதார தேக்கநிலை உருவாகியிருக்கிறது. குறிப்பாக, அமைப்புசாராத் துறையில். இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் ஒரு பிரிவினருக்கு சம்பளத்தில் ரூ.10,000 முன் ரொக்கமாக வழங்க அரசு முடிவெடுத்திருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் இதே போன்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. ஏனைய மாநில அரசுகளும்கூட இம்முடிவை எடுக்கலாம். அப்படி எடுத்தால், அதில் தவறு ஏதும் இல்லை என்றே தோன்றுகிறது. “நாட்டின் எல்லா மக்களும் வங்கிகள் முன் காத்திருக்கையில், அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஏன் இந்தச் சலுகை?” என்று சமூக வலைதளங்களில் எழுப்பப்படும் வரும் கேள்வி நியாயமற்றது.
 
அரசு ஊழியர்கள் என்று குறிப்பிடுகையில், நம் எல்லையில் நிற்கும் ராணுவ வீரர்களில் தொடங்கி கிராமப் பஞ்சாயத்து உதவியாளர் வரை அதில் அடக்கம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவின் அரசு ஊழியர்கள் எண்ணிக்கை வெறுமனே சில ஆயிரங்கள், லட்சங்களுக்குள் அடங்குவது அல்ல; தெருவுக்கு ஒருவர் அல்லது இருபது குடும்பங்களுக்கு ஒரு குடும்பம் என்கிற அளவுக்குப் பரந்து விரிந்தது அது.
அரசு ஊழியர்களின் பணம் எப்போதுமே நம்முடைய சந்தை இயக்கத்தின் மிக முக்கியமான சுழற்சிச் சக்கரங்களில் ஒன்றாக இருக்கிறது. எப்படியும் இந்த மாதச் சம்பளத்தை அவர்களுக்கு அரசு அளித்துதான் ஆக வேண்டும். அதில் கொஞ்சத்தை வங்கிக் கணக்கில் வரவு வைப்பதற்குப் பதிலாக, பணமாக முன்கூட்டி அளிக்கும்போது பணம் நேரடியாகச் சந்தையில் சுழற்சிக்குக் கீழ் நோக்கிப் போகும் என்று அரசு நம்பினால், அது நியாயமானது.

அரசின் சமீபத்திய நடவடிக்கையின் தொடர்ச்சியாக வங்கி ஊழியர்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இதுவரை பலர் பணிச் சுமையால் உயிரிழந்திருக்கின்றனர். வங்கித் துறையினர் மட்டும் அல்லாது சுங்கத் துறையினர், கலால் துறையினர், வருமான வரித் துறையினர், உள்ளூர் காவல் துறையினர் தொடங்கி அன்றாடம் கருவூலத்துக்குப் பணம் கட்டும் தேவையுள்ள ஒவ்வொரு துறையைச் சேர்ந்தவர்களும் தத்தமது அளவில் சிறு அளவிலேனும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். கள்ளப் பொருளாதாரத்துக்கு எதிராக மேலதிகமாக அரசு எடுக்கும் எந்த நடவடிக்கையும் அரசு ஊழியர்களைக் கொண்டே நடந்தாக வேண்டும் என்பது யாரும் அறியாதது அல்ல. ஏற்கெனவே பணிச் சுமை அதிகரித்திருக்கும் நிலையில், அவர்களுடைய தனிப்பட்ட பாதிப்பைக் கொஞ்சம் குறைக்கலாம் என்று அரசு முடிவெடுத்தால், அது தவறும் அல்ல. நம் சமூகத்தில் அமைப்புரீதியில் பாதிப்படையும்போதெல்லாம், அரசு ஊழியர்கள் மீது வன்மக் கண்ணைத் திருப்புவது நம் பொதுப் புத்தியில் வலுவாகவே படிந்திருக்கிறது. இது ஒரு சமூக மனநோயே அன்றி வேறு அல்ல!