விடுபட்ட மதிப்பெண்ணை போராடி பெற்ற மாணவி

பிளஸ் 2 தேர்வில், விடைத்தாளில் விடுபட்ட மதிப்பெண்ணை போராடி பெற்ற மாணவிக்கு, 'தினமலர்' நிகழ்ச்சியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.கடந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வில், சென்னை, பாரிமுனை, கொலம்பியன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவி வி.ரோமிகா, பொருளியல் பாடப் பிரிவில், 1,182 மதிப்பெண் பெற்றிருந்தார்.

விடைத்தாள் நகலை வாங்கிப் பார்த்த போது, தமிழ் தாளில் நான்கு மதிப்பெண்கள், கூட்டலில் விடுபட்டதை கண்டு பிடித்தார்.பின், மறு கூட்டலுக்கு அவர் விண்ணப்பித்தார். ஆனால், 'மதிப்பெண்ணில் மாற்றம் இல்லை' என, தேர்வுத்துறை தெரிவித்தது. உடன், 'தினமலர்' நாளிதழ் அலுவலகத்தை, ரோமிகாவின் பெற்றோர் தொடர்பு கொண்டனர்.
அவர்களுக்கு, நியாயமாக கிடைக்க வேண்டிய மதிப்பெண்ணை பெற, 'தினமலர்' அலுவலகம் வழிமுறைகளை காட்டியது.பின், பள்ளிக்கல்வி மற்றும் தேர்வுத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்து, விடுபட்ட நான்கு மதிப்பெண்ணை மறு கூட்டலில் பெற்றார். இதன் மூலம் அந்த மாணவி, சென்னையில் மாவட்ட அளவில் இரண்டாவது, 'ரேங்க்' பெற்றார். 


ஆனால், மாவட்ட, 'ரேங்க்' பட்டியலில் மாணவியின் பெயரை, தேர்வுத்துறையும், கல்வித்துறையும் சேர்க்கவில்லை. 'தினமலர்' அளித்த வழிகாட்டுதலில், சென்னை மாவட்ட ஆட்சியரை அணுகி, மாவட்ட அளவில், 'ரேங்க்' பெற்றதற்கான சான்றிதழை பெற்றனர். 
தேர்வில் சரியாக விடைகள் எழுதியும், அதற்கான மதிப்பெண்ணை பெற போராடி, ஜெயித்துக் காட்டிய மாணவி ரோமிகாவுக்கு, 'தினமலர்' ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில், பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அந்த மாணவிக்கு, 'தினமலர்' ஆசிரியர், இரா.கிருஷ்ணமூர்த்தி பரிசு வழங்கினார்.


'கிடைத்தது அங்கீகாரம்':
எங்களது நம்பிக்கையான முயற்சிக்கு, 'தினமலர்' நாளிதழ் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கியது. இந்த வெற்றியை அங்கீகரித்து, மாவட்ட ஆட்சியரும் சான்றிதழ் வழங்கினார். தற்போது, சி.ஏ., தேர்வுக்கான தகுதித் தேர்வில், முதல் முறையிலேயே, 'டிஸ்டிங்ஷனில்' வெற்றி பெற்றுள்ளேன்.ரோமிகா, மாணவி