இன்று சம்பள தினம்: வங்கி ஏ.டி.எம்.கள் முழு நேரம் இயங்குமா? அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் எதிர்பார்ப்பு

அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு இன்று சம்பள தினம். அவர்கள் தங்கள் பணத்தை எடுப்பதற்கு வசதியாக வங்கி ஏ.டி.எம்.கள் முழு நேரம் இயங்குமா? என எதிர்பார்த்து இருக்கின்றனர்.

ஏ.டி.எம்.களை தேடி ஓடுவார்கள்
மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு மாதம் தோறும் கடைசி தேதி அன்று சம்பளம் வழங்கப்படுவது வழக்கம். மேலும் ஒரு சில தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் மாதத்தின் கடைசி தினத்தில் சம்பளம் வழங்கப்படும். பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் மாதத்தின் முதல் வாரத்தில் சம்பளம் வழங்கப்படும்.


மாதச் சம்பள ஊழியர்களை பொருத்தவரையில், வீட்டு வாடகை, மளிகை சாமான்கள், பால், அரிசி வாங்குவது, மின்சார கட்டணம் போன்ற பல்வேறு தேவைகளுக்காக தங்களின் சம்பள தினத்தை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். சம்பளம் போடப்பட்ட மறு கணமே, இவர்கள் வங்கிகளின் ஏ.டி.எம்.களை தேடி ஓடுவார்கள். பெரும்பாலும் ஒரு வார காலத்துக்குள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக தங்களின் சம்பளத்தில் பெரும் பகுதியை வங்கி கணக்கில் இருந்து எடுத்து கொள்வார்கள். அதன் பிறகு, அவர்களின் பணத் தேவைகள் குறைவாகவே இருக்கும்.

ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு
500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு, கடந்த 8–ந் தேதி அறிவிக்கப்பட்டதால் மாத சம்பளதாரருக்கு பெருமளவு பாதிப்பு இல்லை. ஆனால், இந்த அறிவிப்புக்கு பிறகு, வங்கி ஏ.டி.எம்.களில் ஒரு நாளைக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாது என ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து, வங்கிகள் தோறும் பணம் எடுக்க மக்கள் வெள்ளம் அதிகமாக காணப்பட்டது. ஏ.டி.எம்.களில் நிரப்பப்படும் பணமும், பணம் நிரப்பிய சில மணி நேரங்களிலேயே தீர்ந்து விடும். அதன் பிறகு, அந்த ஏ.டி.எம்.கள் காலியாகவே கிடக்கும். மேலும், புதிய 2,000 ரூபாய் நோட்டுகள், 500 ரூபாய் நோட்டுகள் வைக்கும் வகையில் ஏ.டி.எம்.களில் மாற்றம் செய்வதாக கூறி பல்வேறு ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பப்படாமல் இருந்தது.

ஊழியர்களின் எதிர்பார்ப்பு
தற்போது புதிய ரூபாய் நோட்டுகள் வைப்பதற்கான மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தாலும், போதுமான அளவு பணம் ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகளுக்கு வராததால், குறைந்த எண்ணிக்கையிலான ஏ.டி.எம்.களில் குறைந்த அளவு பணமே நிரப்பப்படுகிறது. இதனால் பெரும்பாலான ஏ.டி.எம்.கள் மூடப்பட்டு காணப்படுவதுடன், ஏ.டி.எம். சேவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு சம்பளம் வங்கிகளில் போடப்படுவதால், இவற்றை எடுக்க ஏ.டி.எம். மையங்களில் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை சமாளிக்கும் வகையில் அனைத்து ஏ.டி.எம்.களும் திறக்கப்பட்டு, முழுமையான அளவில் பணம் வைக்கப்படுமா? என அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன அனைத்து ஊழியர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதனை வங்கி நிர்வாகங்கள் எப்படி சமாளிக்கப்போகின்றன என்பது இன்றுதான் தெரியவரும்.

பணம் எடுக்கும் வரம்பு உயர்வு
இந்த நிலையில் வங்கிகளில் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு தொகையை 24 ஆயிரத்தில் இருந்து தளர்த்தி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இந்த உச்சவரம்பு தளர்வு வியாபாரிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று கூறப்படுகிறது. குறிப்பிட்ட அளவு பணம் மட்டுமே எடுக்க முடியும் என்ற உத்தரவால் வியாபாரிகள் தங்களது பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்வது குறைந்து உள்ளது. இவர்கள் டெபாசிட் செய்வதை ஊக்கப்படுத்தும் வகையிலேயே உச்சவரம்பு உயர்த்தப்பட்டு உள்ளது. ஒரு வியாபாரி அதிகம் டெபாசிட் செய்தால் அவருக்கு இந்த உச்சவரம்பு பொருந்தும்.

வங்கிகளுக்கு போதுமான பணம் வரத்து இல்லாததால், மேலே குறிப்பிட்டபடி உச்சவரம்பு உயர்த்தப்பட்டாலும் குறைந்த அளவே பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது.