காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுப்பெறும்-கன மழைக்கு வாய்ப்பு.

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்திரன், டிசம்பர் முதல் வாரத்தில் சென்னை உட்பட தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். டிசம்பர் 1ம் தேதி முதல் தமிழகத்தில் மழை பெய்யும். ஓரிரு நாட்கள் கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், இன்று காலை தென்கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வடமேற்கு நோக்கி, தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொள்ளும். இது தமிழகக் கடற்கரையோரமாக நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, டிசம்பர் 1ம் தேதி முதல்  தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யும்.
கடலோரப் பகுதிகளிலும், மேலும் ஒரு சில இடங்களிலும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.