வடகிழக்கு பருவமழையானது சராசரியைவிட 70 சதவீதம் குறைவு

வடகிழக்கு பருவமழையானது சராசரியைவிட 70 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தென் மேற்கு பருவமழையானது முழுவதுமாக விலகிக் கொண்ட பின்பு, அக்டோபர் 20- ஆம் தேதியளவில் வடகிழக்கு பருவமழை தொடங்குவது வழக்கம். ஆனால் நிகழாண்டு 10 நாள்கள் தாமதித்து, அக்டோபர் 30-ஆம் தேதியே வடகிழக்கு பருவமழை தொடங்கியது.

எனினும், போதிய அளவு மழை பெய்யவில்லை. வங்கக் கடலில் உருவாகும் மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்தத் தாழ்வுநிலை ஆகியவை வலுவிழந்து போவதால் தமிழகத்துக்கு போதிய அளவு மழை பெய்யவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:-

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது, வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது தென்மேற்கு திசையை நோக்கி நகரும்போது, தமிழகத்தில் மழை பெய்யக்கூடும்.

இதனால் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்புள்ளது.

வடகிழக்கு பருவமழையானது 100 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததைக் காட்டிலும் இதுவரை 70 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது என்றார் அவர்.