செல்லாத ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை பினாமி பெயர்களில் மாற்றினால் 7 ஆண்டு ஜெயில் வருமான வரித்துறை எச்சரிக்கை

செல்லாத ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை மற்றவர்களின் வங்கி கணக்கில் செலுத்தி மாற்றினால், இருவருக்கும் 7 ஆண்டுகள்வரை ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நோட்டீஸ்
பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து, கருப்பு பண பரிவர்த்தனை, சட்டவிரோத பண பரிவர்த்தனை மற்றும் வரி ஏய்ப்புக்கு எதிராக வருமான வரித்துறை நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளது. ரூ.2½ லட்சத்துக்கு மேல் வங்கியில் செலுத்தியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வருகிறது.


சமீபத்தில் 30 இடங்களில் சோதனை நடத்தியும், 80 கணக்குகளை ஆய்வு செய்தும் ரூ.200 கோடிக்கும் மேலான கணக்கில் காட்டப்படாத வருமானத்தை கண்டுபிடித்தது. இந்த நடவடிக்கையில், ரூ.50 கோடி கருப்பு பணம் கைப்பற்றப்பட்டது.

பினாமி சட்டம்
இந்நிலையில், செல்லாத நோட்டுகளை அடுத்தவர் வங்கி கணக்கில் செலுத்த முயற்சிப்பவர்கள் மீது புதிதாக அமலுக்கு வந்துள்ள பினாமி சொத்து பரிவர்த்தனை தடை சட்டத்தை பிரயோகிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து வருமான வரித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
கடந்த 10–ந் தேதியில் இருந்து அதிக அளவில் பணம் செலுத்தப்பட்ட வங்கி கணக்குகளை அடையாளம் கண்டறியும் பணி, நாடு முழுவதும் நடந்து வருகிறது. ரூ.2½ லட்சத்துக்கு மேல் செலுத்தியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. சந்தேகத்துக்குரிய வகையில் பணம் செலுத்தப்பட்டு இருந்தால், ரூ.2½ லட்சத்துக்கு கீழ் செலுத்தியவர்கள் பற்றியும் விசாரணை நடத்தப்படும்.

வெள்ளை ஆக்க முயற்சி
அடுத்தவரின் வங்கி கணக்கில் செல்லாத ரூபாய் நோட்டுகளை செலுத்தி, அதை வெள்ளை ஆக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. அதை உன்னிப்பாக கண்காணிக்குமாறு மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

நிறைய கருப்பு பணம் வைத்திருப்பவர்கள், சாதாரண மக்களை அணுகி, அவர்களின் வங்கி கணக்கில் செல்லாத நோட்டுகளை செலுத்த சொல்லி, பிறகு புதிய ரூபாய் நோட்டுகளாக பெற்றுத்தருமாறு பேரம் பேசுகின்றனர். புதிய பினாமி பரிவர்த்தனை தடுப்பு சட்டப்படி, இது பினாமி பரிவர்த்தனையாக கருதப்படும். பணம் கொடுப்பவர், அதை தனது கணக்கில் செலுத்துபவர் என இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும்.

7 ஆண்டு ஜெயில்
பணம் கொடுப்பவர், ‘பயன் பெறும் உரிமையாளர்’ எனவும், தனது கணக்கில் அதை செலுத்துபவர் ‘பினாமி’ எனவும் கருதப்படுவர். இருவருக்கும், அதற்கு தூண்டுகோலாக இருப்பவருக்கும் ஒன்று முதல் 7 ஆண்டுகள்வரை கடுங்காவல் தண்டனையும் விதிக்க இந்த சட்டத்தில் வழி உள்ளது.

மேலும், அப்படி செலுத்தப்பட்ட பினாமி பணம் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்படும். அதன் மதிப்பில் 25 சதவீதம்வரை அபராதம் விதிக்கப்படும். இதுபோன்று பணம் செலுத்திய சில நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப தயாராகி வருகிறோம்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.