"டிச.2-க்கு பிறகு மழை வரக்கூடும்': எஸ்.ஆர்.ரமணன்

தமிழகத்தில் டிச.2ஆம் தேதிக்குப் பிறகு மழை வரக்கூடும் என சென்னை வானிலை மைய முன்னாள் இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.

சிதம்பரத்தில் வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தற்போது மழை வருவதற்கான நிகழ்வு ஏதும் ஏற்படவில்லை. வந்த ஒரு நிகழ்வும் வடக்கு நோக்கி சென்றுவிட்டது. சமீபத்தில் ஏற்பட்ட நிகழ்வுகள் இலங்கைக்கு தெற்கே சென்று விட்டதால் நமக்கு மழை பெய்யவில்லை.
கணினி சார்ந்த கணிப்புகளை வைத்து பார்க்கும்போது அடுத்த ஒரு வார காலத்துக்கு பெரும் மழை பெய்வதற்கு வாய்ப்பில்லை. டிசம்பர் 2ஆம் தேதிக்கு பிறகு மழை வரக்கூடும்.
நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் 10 செ.மீ. வரையிலும் மற்ற உள் மாவட்டங்களில் 2 செ.மீ. வரையிலும் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.
அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் சராசரியாக 44 செ.மீ. மழை பெய்ய வேண்டும். தற்போது 9 செ.மீ. வரைதான் மழை பெய்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டில் 33 விழுக்காட்டுக்கு குறைவாக மழை பெய்துள்ளது. தற்போது அதைவிட மோசமான நிலையில் உள்ளது.
மன்னார் வளைகுடாவில் நிகழ்வு ஏற்பட்டால் மட்டுமே தமிழகம் முழுவதிலும் மழை பெய்யும். தற்போது வானம் தெளிந்து இருப்பதால் வெப்பம் குறைந்து குளிர் நிலவி வருகிறது என்றார்.