கையடக்க மண் பரிசோதனை கருவி :காரைக்குடி 'சிக்ரி' விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

நிலத்தில் மண் தன்மையை விவசாயிகளே நேரடியாக அறிய உதவும் கையடக்க கருவியை, காரைக்குடி மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவன (சிக்ரி) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.விவசாயிகள், மண் பரிசோதனை செய்ய மாவட்ட விவசாய அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதில், அலைச்சல் ஏற்படுவதால் மண் பரிசோதனை செய்யாமல், அனுபவ ரீதியாக விவசாயம் செய்து, தேவைக்கு அதிகமான உரங்களை பயன்படுத்துகின்றனர்; இதனால், மண் தரம் குன்றி விளைச்சல் பாதிக்கப்படுகிறது.


இதனால், விவசாயிகளே பயன்படுத்தும் வகையில் மண் பரிசோதனை கருவியை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில், 'சிக்ரி' விஞ்ஞானிகள் மதியரசு, கென்னடி ஈடுபட்டனர்.தற்போது, கையடக்க கருவியை கண்டுபிடித்து அனைத்து மாவட்ட மண்பரிசோதனை நிலையங்களுக்கும் அனுப்பி, அதன் விபரங்களை சேகரித்து வருகின்றனர். இக்கருவியை வணிக ரீதியில் பயன்படுத்துவதற்கான ஆராய்ச்சி தொடர்கிறது.மதியரசு கூறியதாவது: 'பாலி புரோப்பலின் டியூப்'பில் மண்சாறை எடுத்து, கையடக்க கருவியுடன் கூடிய மாதிரி ஹோல்டரில் பொருத்த வேண்டும். அப்போது, மண்ணில் உள்ள சத்துக்களின் சதவீதம் தெரியும்; இதன்படி, விவசாய அதிகாரிகளிடம் ஆலோசனை பெறலாம்.

நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், கார, அமில தன்மை அறிவதற்கு ஏற்ற வகையில் நான்கு 'டியூப்'கள் வழங்கப்படும். ஒரு 'டியூப்' விலை 40 காசுகள் மட்டுமே. தற்போது, 500 ரூபாய் செலவில் இதை வடிவமைத்துள்ளோம். இதை 200 ரூபாய்க்குள் வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். கோவை வேளாண் பல்கலை ஆராய்ச்சி நிலையத்தினர் உதவி வருகின்றனர், என்றார்.