ஒரே நாளில் இரண்டு தேர்வுகள் எதை எழுதுவது, எதை விடுவது?

கல்லுாரி விரிவுரையாளர், வங்கி பணியாளர் பணியிடங்களுக்கான இரண்டு தேர்வுகள், வரும் 22ல் ஒரே நாளில் நடத்தப்படுகிறது. இதனால், எதை எழுதுவது, எதை விடுவது என்று தெரியாமல், பட்டதாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர். அரசு பொறியியல் கல்லுாரிகளில், சீனியர் விரிவுரையாளர், விரிவுரையாளர் மற்றும் ஜூனியர்
விரிவுரையாளர் என மொத்தம், 222 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான தேர்வு, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மூலம், வரும் 22ல் நடத்தப்படுகிறது. சென்னை உட்பட, 11 மாவட்டங்களில், அரசு பொறியியல் கல்லுாரி விரிவுரையாளருக்கான தேர்வு நடக்கிறது. மத்திய அரசின் வங்கி பணியாளர்களுக்கான தேர்வை, இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் அண்ட் பெர்சனல் செலக் ஷன் என்ற அமைப்பு, வரும், 22ல் நடத்துகிறது. இதனால், எந்த தேர்வை எழுதுவது என்று, பட்டதாரிகள் குழப்பம் அடைந்து உள்ளனர்.
இரண்டு தேர்வுகளுக்கும் விண்ணப்பித்து, ஹால் டிக்கெட் பெற்றவர்கள் கூறியதாவது:டி.ஆர்.பி., நடத்தும் தேர்வுக்கு விண்ணப்பித்து, அதற்கான ஹால் டிக்கெட்டும் வாங்கி விட்டோம். ஆனால், இதற்கிடையில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, ஓட்டு எண்ணிக்கை, 21ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதனால், டி.ஆர்.பி., குறிப்பிட்ட தேர்வு மையங்களில், தேர்வு நடக்குமா என்ற குழப்பம் ஏற்பட்டது. ஆனால், உள்ளாட்சி தேர்தலை நீதிமன்றம் ரத்து செய்ததால், 22ல் நடக்கக் கூடிய, டி.ஆர்.பி., தேர்வு பற்றிய பிரச்னை நீங்கியது. ஆனால், அதே தேதியில் நடத்தப்படும், மத்திய அரசின் வங்கி பணியாளர்கள் தேர்வுக்கான ஹால் டிக்கெட், இப்போது இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் அண்ட் பெர்சனல் செலக் ஷன் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால், வேலை இல்லா பட்டதாரிகளான நாங்கள், ஒரே நாளில் நடக்கும் இரண்டு தேர்வுக்கும், ஹால் டிக்கெட்டுகளை பெற்றுக் கொண்டு, எந்த தேர்வை எழுதுவது, எந்த தேர்வை விடுவது என்று தெரியாமல் குழப்பம் அடைந்து உள்ளோம்.இவ்வாறு அவர்கள், வேதனையுடன் தெரிவித்தனர்.