தங்கள் வங்கி ஏ.டி.எம்களை மட்டுமே பயன்படுத்துமாறு வாடிக்கையாளர்களுக்கு எஸ்.பி.ஐ அறிவுறுத்தல்!


கொல்கத்தா: பாரத ஸ்டேட் வாங்கி தங்கள் வங்கியின் ஏ.டி.எம்களை மட்டுமே பயன்படுத்தி பண பரிவர்த்தனை மேற்கொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள சில வங்கிகள் வழங்கிய ஏ.டி.எம். அட்டைகள் குறித்த விபரங்கள் இணையதள மோசடி கும்பலொன்றின் அச்சுறுத்தலுக்கு இலக்காகி இருப்பதாக திடுக்கிடும் தகவல் சமீபத்தில் வெளியானது. ஏ.டி.எம். அட்டையில் உள்ள ரகசிய குறியீட்டு எண் உள்ளிட்ட பாதுகாப்பு குறியீடுகளை திருடி, அக்கும்பல் பண பரிவர்த்தனை மோசடியில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
யெஸ் வங்கி என்ற தனியார் வங்கியின் பணப் பரிவர்த்தனைகளை செய்து வரும் ஹிடாச்சி பேமண்ட் சர்வீசஸ் என்ற தனியார் நிறுவனத்தின் கம்ப்யூட்டர்களில் ஊடுருவி பாதுகாப்பு குறியீடு திருட்டு நடந்துள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா, ஐ.டி.பி.ஐ. வங்கி, சென்டிரல் வங்கி, ஆந்திரா வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி, யெஸ் வங்கி ஆகிய வங்கிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக 32 லட்சத்துக்கும் மேற்பட்ட அட்டைகளின் விபரங்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அந்த வங்கிகள் உஷார் அடைந்துள்ளன. பாரத ஸ்டேட் வங்கி, தனது வாடிக்கையாளர்களின் 6 லட்சம் ஏ.டி.எம். அட்டைகளை திரும்ப பெற்றுள்ளது. சில அட்டைகளை முடக்கி உள்ளது.
மேலும் சில வங்கிகள் பாதிக்கப்பட்டுள்ளதாங்க் சந்தேகிக்கப்படும் அட்டைகளை முடக்கி விட்டு, மாற்று அட்டைகள் வழங்கி உள்ளன.
இந்த நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, தங்கள் வங்கியின் ஏ.டி.எம்களை மட்டுமே பயன்படுத்தி பண பரிவர்த்தனை மேற்கொள்ளுமாறு வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.