சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு: பொதுத் தேர்வு முறை மீண்டும் அறிமுகம்?

சிபிஎஸ்இ வழிக் கல்வியில் பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தும் நடைமுறையை மீண்டும் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், சிபிஎஸ்இ பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் விதிகளைத் திருத்தியமைப்பது குறித்தும் பரிசீவிலிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. மாநிலப் பாடத்திட்டத்தைப் போலவே, சிபிஎஸ்இ வழிக் கல்வியிலும் பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தும் முறை அமலில் இருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களுக்காக அந்த நடைமுறை கடந்த 2010-ஆம் ஆண்டில் கைவிடப்பட்டது.



இந்த நிலையில், அதனை மீண்டும் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டு வருவதாகத் தெரிகிறது. மத்தியக் கல்வி ஆலோசனை வாரியத்தின் கூட்டம் வரும் 25-ஆம் தேதி நடைபெறுகிறது. அதில், இதுகுறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கூட்டம், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தலைமையில் நடைபெறவுள்ளதாகவும், வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர் சங்க நிர்வாகிகள் அதில் பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சிபிஎஸ்இ பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறையை ரத்து செய்வது குறித்து மத்தியக் கல்வி ஆலோசனை வாரியம் ஏற்கெனவே பரிசீலித்து வருகிறது. இந்தச் சூழலில், பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தாமல் இருப்பது சிபிஎஸ்இ கல்வியின் தரத்தை பாதிக்கும் வகையில் உள்ளதாக கல்வியாளர்கள் கருதுகின்றனர்.


மேலும், நேரடியாக பிளஸ்-2 பொதுத் தேர்வை எதிர்கொள்வது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு சிரமமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அவற்றைக் கருத்தில் கொண்டே பத்தாம் வகுப்புக்கு மீண்டும் பொதுத் தேர்வு நடத்தத் திட்டமிடப்பட்டு வருகிறது என்றார் அவர்.