வருமான வரி 'இ - பைலிங்' நாளை வரை அவகாசம்

தனியார் நிறுவனங்கள், இணையதளம் வாயிலாக, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காக நீட்டிக்கப்பட்ட காலக்கெடு, நாளையுடன் நிறைவடைகிறது. ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமாக வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள்; 25 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக வருமானம் ஈட்டும் தனி நபர்கள்; கூட்டு நிறுவன பங்குதாரர்கள், ஆடிட்டர் மூலம் வருமானத்தை தணிக்கை செய்ய வேண்டியது அவசியம். அத்தகையவர்கள்,
இணையதளம் வழியாக, 'இ - பைலிங்' முறையில் மட்டுமே, வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். அத்துடன், ஆடிட்டரின் தணிக்கை அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். இப்பிரிவில் வருமான வரி செலுத்துவோருக்கு, கணக்கு தாக்கல் செய்ய, செப்., 17 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. கறுப்புப் பணத்தை வெளியில் கொண்டு வரும் திட்டத்திற்கு, செப்., 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது; அதனால், இ - பைலிங் காலக்கெடு, அக்., 17 வரை நீட்டிக்கப்பட்டது; அது, நாளையுடன் நிறைவடைகிறது.
இதுகுறித்து, வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது: நாங்கள் விதித்த காலக்கெடுவிற்குள், கணக்கு தாக்கல் செய்வோருக்கு, அதில் தவறு இருந்தாலோ, ஏதேனும் தகவல் விடுபட்டு இருந்தாலோ, திருத்துவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும்; காலம் தவறி, மனு தாக்கல் செய்வோருக்கு, அந்த சலுகை கிடைக்காது. ஆடிட்டரின் அறிக்கையை இணைக்காவிட்டால், அபராதம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.