2008 மும்பை தாக்குதலில் பலரது உயிரைக் காத்த ஹீரோவான 'சீசர் ' மறைவு !


மும்பை: மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலின் போது , பலரது உயிரைக் காத்த, காவல்துறையின் மோப்ப நாய் 'சீசர்' நேற்றிரவு உயிரிழந்தது.

இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர்.இந்த தாக்குதல் நடைபெற்ற சமயத்தில் மும்பை நகர காவல்துறையின் மோப்ப நாய்களில் ஒன்றாக பணிபுரிந்து வந்தது சீசர். அப்போது சி.எஸ்.டி ரயில்நிலையத்தில் தனது மோப்ப சக்தியின் மூலமாக, தீவிரவாதிகள் விட்டுச் சென்றிருந்த இரண்டு கையெறி குண்டுகளை சீசர் கண்டு பிடித்தது. இதன்மூலமாக நூற்றுக்கணக்கானோர் உயிர் பிழைத்தனர்.
அதே போல் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த நாரிமன் இல்லத்தில் நடைபெற்ற தேடுதல் வேட்டையிலும் சீசர் பங்களித்தது. பின்னர் 2011-ஆம் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களிலும் சீசர் தனது பங்களிப்பை செலுத்தியிருந்தது. ஓய்வுக்கு பிறகு மோப்ப நாய்கள் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற தனது இதர நண்பர்களுடன் மும்பையின் புறநகர் பகுதியான விராத்தில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் சீசர் வசித்து வந்தது. நண்பர்கள் ஒவ்வொருவராக உடல் நலக் குறைபாடு காரணமாக மரணம் அடைந்து வந்த வேளையில், சீஸரும் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
சிறிது சிறிதாக உடல் நலம் தேறி வந்த நிலையில், சீசர் நேற்று இரவு மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தது.
இது குறித்த தகவலை மும்பை நகர் காவல்துறை மற்றும் மும்பை மாநகர் காவல்துறை ஆணையர் ஆகியோர் தங்கள் டிவிட்டர் பக்கங்களில் பகிர்ந்திருந்தார். இதற்கு சமூக வலைத்தகளங்களில் அனுதாபம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.