ஸ்மார்ட் கார்டில் குடும்ப அட்டை: நவம்பரில் பணி தொடக்கம்

பயோ-மெட்ரிக் அடிப்படையில் விவரங்கள் அடங்கிய ஸ்மார்ட் வடிவிலான குடும்ப அட்டைகளை அச்சிடும் பணி நவம்பரில் தொடங்குகிறது என்று உணவுப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

குடும்ப அட்டைகளை நவீனப்படுத்தவும், போலி அட்டைகளைக் கண்டறிந்து களையவும் ஸ்மார்ட் கார்ட் வடிவில் குடும்ப அட்டைகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக, ஆதார் எண்ணுடன் குடும்ப அட்டையை இணைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதற்காக ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் சிறிய ஸ்கேனர் கருவி அளிக்கப்பட்டுள்ளது.
2 மாத கால அவகாசம்:
இந்தப் பணி இன்னும் 2 மாதங்களுக்கு நடைபெற உள்ளதால், குடும்ப அட்டையுடன் நீண்ட நேரம் வரிசையில் பொது மக்கள் காத்திருக்கத் தேவையில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
80 சதவீத பணிகள் நிறைவு:
இந்தப் பணி 13 மாவட்டங்களில் 80 சதவீதம் நிறைவடைந்தும், தென் மாவட்டங்களில் பெரும்பான்மையான அளவில் பணிகள் முடியும் நிலையில் உள்ளதாக உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அடுத்த கட்டமாக திருப்பூர், கோவை, சேலம், தருமபுரி மாவட்டங்களில் தொடங்கி நடந்து வருகிறது.
இதில், தென் சென்னையில் செப்டம்பர் 6-ஆம் தேதியும், வட சென்னையில் செப்டம்பர் 7-ஆம் தேதியும் 2 ஆயிரம் கடைகளில் பதிவுப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
முழு விவரம் பதிவு:
குடும்ப அட்டையின் குறியீடு எண், அட்டை எண், இல்ல முகவரி, குடும்ப உறுப்பினர்கள் விவரம், செல்லிடப்பேசி எண், எரிவாயு உருளைகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் கடை விற்பனையாளர் மூலம் பதிவு செய்யப்படுகிறது. அதைத் தொடர்ந்து, ஆதார் அட்டையில் பார்கோடை அந்தக் கருவி ஸ்கேன் செய்தால், ஒரு குடும்பத்தினரின் அனைத்து விவரங்களும் தெரியவரும்.
குறுஞ்செய்தி மூலம் தகவல்: இதுகுறித்து கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
நவம்பர் 1-ஆம் தேதி முதல் நவீன ஸ்மார்ட் வடிவில் குடும்ப அட்டை அச்சடிக்கும் பணி தொடங்கி, டிசம்பருக்குள் முடிந்து விடும். மேலும், அடுத்தாண்டு ஜனவரி முதல் பழைய அட்டைகளைப் பெற்றுக் கொண்டு புதிய நவீன அட்டைகள் வழங்கப்படும்.
இந்த ஸ்மார்ட் கார்டு மூலம் பொருள்கள் வாங்கும் போது ரசீதுகள் வழங்கப்படாது. இந்த அட்டையை இயந்திரத்தில் காட்டினால் போதும்; அவர்களுக்கு உரிய பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் பொருள்கள் இருப்பு மற்றும் பொருள்கள் வாங்கிய தகவலை செல்லிடப்பேசி குறுஞ்செய்தி மூலம் அறிந்து கொள்ளலாம் என்றனர்.
கொண்டு செல்ல வேண்டிய
ஆவணங்கள் என்ன?
குடும்ப அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க, குடும்ப அட்டை, அசல் ஆதார் அட்டை ஆகிய இரண்டையும் ரேஷன் கடைக்கு குடும்ப அட்டைதாரர்கள் எடுத்துச் செல்வது அவசியம்.
இரண்டில் உள்ள விவரங்கள் சிறிய ஸ்கேன் கருவில் பதிவு செய்யப்படும். பதிவு செய்யப்பட்டதை உறுதி செய்யும் வகையில் குடும்ப அட்டைதாரரின் செல்லிடப்பேசிக்கு குறும் தகவல் சேவை (எஸ்எம்எஸ்) அனுப்பப்படும்.
மேலும் ரேஷன் கடையில் பொருள்கள் வழங்கப்பட்டதற்கான பில் எண்-பொருள்கள் குறித்த விவரமும் குடும்பத் தலைவரின் செல்லிடப்பேசிக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.