புத்தகப் பையால் ஆபத்து: சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை

'மாணவர்கள் தோளில் தொங்கும்படி, புத்தகப் பைகளை கொண்டு சென்றால், முதுகு பகுதியில் பாதிப்பு ஏற்படும்' என, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக, சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள அறிவுரை:

அதிக சுமை உள்ள பள்ளி புத்தகப் பைகளை, நீண்டகாலம் மாணவர்கள் சுமப்பது, அவர்களின் உடல் நலனில் எதிர் விளைவை ஏற்படுத்தும். இளம் குழந்தைகள் வளர வேண்டிய நிலையில், அவர்களுக்கு, முதுகு தண்டுவடத்தில் வலி, தசை வலி, தோள் வலி, மயக்கம் உட்பட, பல பிரச்னைகளை ஏற்படுத்தும்
முடிந்த அளவுக்கு அன்றைய வகுப்புக்கான, பாடப் புத்தகங்களை மட்டுமே மாணவர்கள் கொண்டு செல்ல வேண்டும். பள்ளி பயன்பாட்டு புத்தகம் மற்றும் நோட்டுகளை, பள்ளியிலேயே வைத்துக் கொள்வது நல்லது
பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு எடை குறைந்த, இரு தோள்களிலும் மாட்டக்கூடிய, பெல்ட் உடைய பைகளையே வாங்க வேண்டும்
பள்ளிக் குழந்தைகள், தங்களின் புத்தகப் பைகளில், விளையாட்டு பொருட்கள் மற்றும் தாங்கள் விரும்பும் பல பொருட்களை வைத்துக் கொள்வது வழக்கம். அதனால், எடை கூடும் என்பதால், பெற்றோர், தினமும் சோதிக்க வேண்டும்
குழந்தைகளின் தோளில், பைகள் இறுக்கமாக இருக்க வேண்டும்; அங்கும், இங்கும் தொங்கினால், தோள்களை பாதிக்கும்.இவ்வாறு அறிவுரையில் கூறப்பட்டுள்ளது.