அரசுப்பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள்; பொதுத்தேர்வுக்கான முன்தயாரிப்பு!

முக்கிய பாடங்களில் பின்தங்கும் மாணவர்களுக்கு, பயிற்சி அளிக்கும் நோக்கில், காலாண்டு விடுமுறையில், அரசு பள்ளிகளில் சிறப்பு
வகுப்புகள் நடக்கின்றன.
பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் நோக்கில், பத்தாம், பிளஸ் 2மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்,மாலை நேர வகுப்புகள் எடுப்பது வழக்கம். சமச்சீர் கல்வித்திட்டம் நடைமுறைப்படுத்திய பின், அரசுப்பள்ளி மாணவர்களும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக, மாநில,மாவட்ட தரத்தில் மதிப்பெண்கள் பெறுகின்றனர்.
அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம் சார்பில், மாநில ரேங்குகளில், அரசுப்பள்ளிகள் இடம்பெறும் நோக்கில், &'டான் எக்ஸ்செல்&' திட்டம் அறிமுகம்செய்யப்பட்டுள்ளது. இதில், முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள்மட்டுமே பங்கேற்க முடியும்.
கோவை மாவட்டத்தில், 100மாணவர்களுக்கு மட்டுமே, இந்த சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. மற்ற மாணவர்களும் அதிக மதிப்பெண்கள் பெறவும், தோல்வி விகிதத்தை குறைத்து,நுாறு சதவீத தேர்ச்சி இலக்கை அடையவும், சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதில், முக்கிய பாடப்பிரிவுகள் மட்டும் கையாள திட்டமிடப்பட்டுள்ளது. இதனால்,தமிழ், ஆங்கிலம், கலைப்பாடப்பிரிவு ஆசிரியர்களுக்கு மட்டும், தேர்தல் பணி ஒதுக்க, கல்வித்துறைபரிந்துரைத்துள்ளது.
காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து,அக்., 3ம் தேதி பள்ளிகள் துவங்கும் என,அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த இடைப்பட்ட நாட்களில், காலாண்டு வரையுள்ள பாடத்திட்டத்தில், புரியாத கடின பகுதிகளை விளக்கவும், செய்முறை வகுப்பு நடத்தவும், முடிவு செய்துள்ளதாக, தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.
அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், கடந்த கல்வியாண்டு பொதுத்தேர்வில், இயற்பியல், கணிதம்,விலங்கியல் பாடங்களில், தோல்வியை சந்தித்த மாணவர்கள் அதிகளவில் இருந்தனர். எனவே, இந்த பாடங்களை கையாள முன்னுரிமை அளித்துள்ளோம்.

விடுமுறையில் பாடத்தை கவனிக்கும் மனநிலையை ஏற்படுத்த, இடையிடையே விளையாடவும், வினாடி-வினா போட்டிகள் நடத்தி, கவனசிதறலை குறைக்கவும் முடிவு செய்துள்ளோம் என்றனர்.