அரசு உதவி பள்ளிகளில் 3,000 உபரி ஆசிரியர்கள்

அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில், 3,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். தமிழகத்தில் உள்ள, 45 ஆயிரம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், 31 ஆயிரம் பள்ளிகள், அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன; 6,500 பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள்; மற்றவை தனியார் பள்ளிகள். இதில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும், 11.50 லட்சம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களுக்கு, 36 ஆயிரம் ஆசிரியர்கள்உள்ளனர். 


ஆனால், மத்திய அரசின் சட்டப்படி, 35 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் வீதம், 33 ஆயிரம் ஆசிரியர்கள் மட்டுமே பணியில் இருக்க வேண்டும். கிட்டத்தட்ட, 3,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கூடுதலாக பணியாற்றுகின்றனர். அதிலும், குறிப்பிட்ட சில மாவட்ட பள்ளிகளில் மட்டும், இத்தகையை ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகம். அதேநேரத்தில், பல மாவட்டங்களில் உள்ள, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை உள்ளது.
எனவே, தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள், இந்த பள்ளிகளை ஆய்வு செய்து, கூடுதல் ஆசிரியர்களை, தேவைப்படும் மாவட்டங்களுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.