16ம் தேதி முழு அடைப்பு: தமிழகத்தில் பெட்ரோல் பங்குகளும் செயல்படாது.


தமிழகத்தில் வரும் 16ம் தேதி நடைபெறும் முழு அடைப்புப் போராட்டம் காரணமாக தமிழகத்தில் பெட்ரோல் பங்குகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடும்படி கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவை அடுத்து செப்டம்பர் 7ம் தேதி காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.


ஆனால், இதனை எதிர்த்து, கர்நாடகாவில் பெரும் வன்முறை வெடித்தது. தமிழர்களும், அவர்களது வாகனங்கள், சொத்துக்கள் தாக்குதலுக்கு உள்ளாகின.

இந்த நடவடிக்கையை கண்டித்து தமிழகத்தில் வரும் 16ம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு பல்வேறு கட்சிகளும், வணிகர் சங்க அமைப்புகளும், பால் முகவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், வரும் 16ம் தேதிமுழு அடைப்புப் போராட்டத்தையொட்டி, அன்றைய தினம் பெட்ரோல் பங்குகளும் இயங்காது என்று தமிழ்நாடு பெட்ரோல் பங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் முரளி அறிவித்துள்ளார்.

வரும் 16ம் தேதி தமிழகத்தில் உள்ள 4,600 பெட்ரோல் பங்குகளும், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.