பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் மத்திய கல்வி வாரியத்தில் 10-ம் வகுப்பு தேர்வுகளை தமிழில் எழுதலாம்

பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் மத்திய கல்வி வாரியத்தில் 10-ம் வகுப்பு தேர்வுகளை தமிழில் எழுதலாம் என்று தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவன தலைவர் சி.பி.சர்மா தெரிவித்தார்.

திறந்தநிலை பள்ளி

தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் சி.பி.சர்மா, சென்னை மண்டல இயக்குனர் பி.ரவி ஆகியோர் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-



மத்திய கல்வி வாரியமான தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் சார்பில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. 14 வயது பூர்த்தியானவர்கள் வயது உச்சவரம்பின்றி யார் வேண்டுமானாலும் இதில் சேர்ந்து படிக்கலாம். விளையாட்டு, இசை, கலைத்துறையில் இருப்பவர்கள் தங்களது துறைகளில் கவனம் செலுத்துவதால் பள்ளி படிப்பை தொடர முடியாத சூழல் ஏற்படுகிறது.

இதுபோன்று பள்ளி படிப்பை இடையில் நிறுத்தியவர்கள், பணிச்சூழல் காரணமாக பள்ளிகளுக்கு செல்ல முடியாதவர்கள் எங்களது கல்வி வாரியம் மூலம் பயனடைந்து வருகிறார்கள். தமிழக மாணவர்களின் தேவையை கருத்தில்கொண்டு 26 வருடங்களுக்கு பின்னர் முதல் முறையாக தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் 11 பாடங்களை தமிழில் மொழியாக்கம் செய்துள்ளது.

தமிழில் தேர்வு எழுதலாம்

இதன்படி கணிதம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக அறிவியல், பொருளாதாரம், வர்த்தக பாடங்கள், மனையியல், உளவியல், இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியம், கணக்குப்பதிவியல், ஓவியம் தீட்டுதல் மற்றும் தகவல் பதிவியல் ஆகிய 11 பாடங்களை வருகிற கல்வி ஆண்டு முதல் தமிழில் எழுதலாம். இதில் ஏதேனும் 4 பாடங்களுடன், ஒன்று அல்லது 2 மொழிப்பாடங்களிலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 10-ம் வகுப்பு சான்றிதழ் வழங்கப்படும்.

இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து 12-ம் வகுப்பு பாடங்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்படும். தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனத்தில் 10-ம் வகுப்பு படிக்க விரும்புபவர்கள் www.nios.ac.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். ஒரு முறை கட்டணம் செலுத்தி பதிவு செய்தால் அவர்கள் 5 ஆண்டுகளில் தேர்ச்சி பெறும் வரையிலும் தேர்வுகள் எழுதலாம்.

ஐ.டி.ஐ. மாணவர்களுக்கு

இதேபோல ஐ.டி.ஐ. படித்த மாணவர்கள் தாங்கள் படித்த பாடங்களுடன், விரும்பிய 2 பாடங்களிலும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் 10-ம் வகுப்பு அல்லது 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ்கள் வழங்கப்படும். இதன்மூலம் ஐ.டி.ஐ. மாணவர்களுக்கு தற்போது உயர்கல்வி பெறும் வாய்ப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.

12-ம் வகுப்பு நிறைவு செய்யாத ராணுவ வீரர்களுக்காக 3 பாடப்பிரிவுகள் தொடங்கியுள் ளோம். ராணுவ வீரர்களுக்கு அவர்கள் பணி செய்யும் இடத்தின் அருகாமையிலேயே வகுப்புகள் நடத்தப்படும்.

தமிழக அரசுக்கு கோரிக்கை

சென்னையில் 20 இடங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 108 மையங்கள் உள்ளன. எங்கள் நிறுவனத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை தமிழகத்தில் பல கல்வி நிறுவனங்கள் உயர் படிப்புகளில் சேர்க்க மறுக்கின்றனர். கல்வி நிறுவனங்கள் எங்களது சான்றிதழ்களை அங்கீகரிக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும். செவித்திறன் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பதில்கள் குரல் பதிவு மூலமாக பதிவு செய்யப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.