NMMS தேர்வு பாட திட்டம் வெளியாகுமா?

  'ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, உதவித்தொகை பெற்று தரும் தேர்வு குறித்த, பாடத் திட்டத்தை தற்போதே வெளியிட வேண்டும்' என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

 
         எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசு சார்பில், தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகைக்கான என்.எம்.எம்.எஸ்., தேர்வு, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். தேர்ச்சி பெறுவோருக்கு, 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, மாதம்தோறும், 500 ரூபாய் கல்வி உதவித்தொகை, மத்திய அரசால் வழங்கப்படும்.
ஏழாம் வகுப்பின் முழு ஆண்டு தேர்வில், 55 சதவீத மதிப்பெண்களுக்கு மேலும், ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள், 50 சதவீதமும் மதிப்பெண் பெற்றிருந்தால், இந்த தேர்வு எழுதலாம். ஆண்டுதோறும் பிப்ரவரியில் நடக்கும் இத்தேர்வில், குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே தேர்ச்சி பெறுகின்றனர். அதிக மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில், தேர்வுக்கான பாடத்திட்டம், வினாக்களின் வகை, மாதிரி வினாக்கள் போன்றவற்றை, அரசு தேர்வுத்துறை தற்போதே அறிவித்தால், கிராமப்புற மாணவர்கள், தேர்வுக்கு தயாராக முடியும் என, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.