எலைட் திட்டத்தால் ஆசிரியர்கள் குழப்பம் : கலெக்டர், கல்வி அதிகாரிகள் மாறி மாறி உத்தரவு-DINAMALAR

ராமநாதபுரம் மாவட்டத்தில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, கலெக்டரும், கல்வி அதிகாரிகளும் மாற்றி மாற்றி உத்தரவிடுவதால், யார் உத்தரவை பின்பற்றுவது என, ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களை, இன்ஜி., மற்றும் மருத்துவ படிப்பில் சேர்க்க, 'எலைட்' என்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த கல்வி ஆண்டில், சில மாணவ, மாணவியர் அரசு கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., இடம் பெற்றனர். அதேநேரம், இந்த திட்டத்தால் பல மாணவர்கள், பிளஸ் 2 தேர்ச்சி வாய்ப்பை இழக்கும் அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எலைட் திட்டத்தில் நன்றாக படிக்கும் மாணவர்களை மட்டும் தேர்வு செய்து, அவர்களுக்கு, தனியார் பள்ளிகள் போல், பிளஸ் 1 வகுப்பிலேயே, பிளஸ் 2 பாடம் நடத்தப்படுகிறது. அரசு பள்ளிகளில் சிறந்த ஆசிரியர்கள், பயிற்சியாளர்களாக, மாற்று பணியில் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள், தங்களுக்கு பணி ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் பாடம் நடத்தாமல் விடுவதால், சராசரி மாணவர்கள் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து, மாவட்ட கலெக்டரிடம், ஆசிரியர் சங்கங்கள் முறையிட்டுள்ளன. 'எலைட் திட்டம் தான் முக்கியம்' என, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட கல்வி அதிகாரிகளோ, 'அனைத்து பள்ளிகளின் தேர்ச்சி விகிதமும் பாதிக்கப்படக் கூடாது' என, உத்தரவிட்டுள்ளனர். இதில், எந்த உத்தரவை பின்பற்றுவது என, ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.

ஆசிரியர் சங்கத்தினர் கூறுகையில், 'கடந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வில், 93 சதவீத தேர்ச்சி பெற வைத்தோம்; இதை, 100 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். எலைட் திட்டத்தில், பல ஆசிரியர்கள் மாற்றுப் பணியில் சென்றதால், பள்ளிகளில் பாடம் நடத்துவது பாதிக்கப்பட்டுள்ளது. எலைட் திட்டத்துக்கு தனி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்' என்றனர்.