சென்னை உயர்நீதிமன்றம் என்பதை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று மாற்றம்:சட்டப்பேரவையில் தீர்மானம், நிறைவேற்றப்பட்டது

        சென்னை உயர்நீதிமன்றம் என்பதை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று மாற்றக் கோரி, சட்டப்பேரவையில், முதலமைச்சர்ஜெயலலிதா கொண்டு வந்த தனித் தீர்மானம், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
 
         இந்த சிறப்பு தீர்மானம் குறித்து சட்டசபையில் பேசிய ஜெயலலிதா, சென்னை உயர் நீதிமன்றம் என்னும் பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் எனவும், மதுரை உயர் நீதிமன்றம்கிளையின் பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் கிளை எனவும் பெயர் மாற்ற செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.இந்த பெயர் மாற்றத்தை நாடாளுமன்றச் சட்டத் திருத்தத்தில் கொண்டு வர வேண்டும் என்றும், மற்ற மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்கள் பெயர்களையும் அந்தந்த மாநிலங்களின் பெயர்களிலேயே மாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

அத்துடன் இந்த தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.இந்த சிறப்புத் தீர்மானத்திற்கு திமுக, காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து பேசினர். இதனையடுத்து இந்த தனித் தீர்மானம், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே சென்னை உயர்நீதிமன்றம் என்பதை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று மாற்றக் கோரி சட்டப்பேரவையில் இயற்றிய சிறப்புத் தீர்மானத்தின் மீதுநடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில், தமிழக சட்டப்பேரவையில் இயற்றிய தீர்மானத்தின் நகலையும் இணைந்துள்ளார். அதன் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் ஜெயலலிதா, தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.