இந்த ஆண்டு இறுதிக்குள் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்படும் !

       இந்த ஆண்டு இறுதிக்குள் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்படும்,'' என, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலர் எஸ்.கோபால கிருஷ்ணன் தெரிவித்தார். 
 
        ராமநாதபுரம் மாவட்டத்தில் ரேஷன் கடைகளை கணினி மயமாக்கும் திட்டத்தின் (பி.ஓ.எஸ்) செயல்பாடுகள் குறித்து முதன்மை செயலர் கோபாலகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: தமிழகத்தில் 35 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளன. அவற்றில் 20ஆயிரம் கடைகளில் 'பாயின்ட் ஆப் சேல்' (பி.ஓ.எஸ்) எனப்படும் கணினி மயமாக்கும் பணிகள்
நிறைவடைந்துள்ளன. இதன் மூலம் பொதுமக்கள் அவரவர் கடைகளின் செயல்பாடு குறித்து நேரடியாக அறிய முடியும். ஆதார் எண் பதியப்பட்டு, குடும்ப அட்டைதாரரின் அலைபேசி
எண் பதியப்படுகிறது. அவர்கள் வாங்கிய பொருட்கள் குறித்து உடனடியாக குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. ரேஷன் பொருள் இருப்பு விபரம், தேவை குறித்த அனைத்து விபரங்களையும் பெற முடியும். மீதமுள்ள 15 ஆயிரம் கடைகளில் செப்., மாத இறுதிக்குள் இந்த பணிகள் நிறைவடையும். தமிழகத்தில் 2 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் 'ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள்' வழங்கப்படும்.கடந்த ஐந்தாண்டுகளில் 4.50 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப் பட்டுள்ளன. அதே நேரம் தகுதியானவர்களுக்கு புதிதாக 11 லட்சம் ரேஷன்கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. ஐந்தாண்டுகளில் ரேஷன்கடைகளை கணினி மயமாக்கும் பணிகளுக்காக ரூ.400 கோடி செலவிடப்பட உள்ளது.மேலும் கடந்த ஐந்தாண்டுகளில் பொது வினியோக திட்டத்தில் மானியமாக தமிழக அரசு ரூ.5,300 கோடி ஒதுக்கி உள்ளது.
மாதந்தோறும் ரேஷனில் 3.50 லட்சம் டன் அரிசி, 36,500 டன் சர்க்கரை, 16,300 டன் கோதுமை, 13,500 டன் துவரம் பருப்பு, 7,000 டன் உளுந்தம் பருப்பு, 25 ஆயிரம் கி.லி., மண்ணெண்ணெய், 1.50 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.இவ்வாறு கூறினார். கலெக்டர் நடராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் அலி அக்பர் உடன் இருந்தனர்.