ராணுவ கல்லூரியில் சேர மாணவர்களுக்கு விழிப்புணர்வு

இந்திய ராணுவக் கல்லுாரியில் சேருவது குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என, அரசு பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள இந்திய ராணுவப் பள்ளியில், 8ம் வகுப்பு முதல் மாணவர்கள் சேர்க்கப்பட்டு, பள்ளிக் கல்வியும், பின், கல்லுாரிக் கல்வியும் இலவசமாக வழங்கப்படுகிறது. கல்லுாரிக் கல்வியில், ராணுவம் சார்ந்த படிப்பும், பயிற்சியும் தரப்படுகிறது.


இதற்கு, இந்த ஆண்டு, 7ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, நுழைவுத் தேர்வு நடத்தப்படும். தேர்ச்சி பெறுவோர், நேர்முகத் தேர்வு அடிப்படையில் ராணுவக் கல்லுாரியில் சேர்க்கப்படுவர். இந்த நுழைவுத் தேர்வுக்கு, செப்., 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, இந்திய ராணுவக் கல்லுாரி அறிவித்துள்ளது.
இந்திய ராணுவக் கல்லுாரிக்கு கடிதம் எழுதி, விண்ணப்பங்களை பெற வேண்டும். டிசம்பர், 1, 2ம் தேதிகளில் எழுத்துத் தேர்வு நடக்கும். இதில் தேர்ச்சி பெறுவோர், 2017 ஏப்ரலில் நடக்கும் நேர்முகத் தேர்வில் பங்கேற்பர். இதற்கான அறிவிப்பை, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளிக் கல்வி இயக்குனர்
அனுப்பியுள்ளார்.
'அதை, அனைத்து அரசு பள்ளிகளின் அறிவிப்பு பலகைகளிலும், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு தெரியும்படி வெளியிட வேண்டும். பள்ளிகளின் பிரார்த்தனை கூட்டத்திலும் அறிவித்து, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்