பி.இ. காலியிடங்கள் அதிகரிப்பது ஏன்?

சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் காலி இடங்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதற்கு, தரமான ஆசிரியர்கள் இல்லாததே முக்கியக் காரணம் என்கின்றனர் கல்வியாளர்கள். இதே நிலை நீடித்தால், மாணவர் சேர்க்கை மேலும் குறைய வாய்ப்புள்ளது எனவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தின்படி, சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால், ஆண்டுதோறும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இடங்கள் காலியாகவே இருக்கின்றன.
2013-14-ஆம் கல்வியாண்டில் தமிழகம் முழுவதும் 541 சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு, அரசு ஒதுக்கீடு என இரண்டும் சேர்த்து 2,72,872 இடங்கள் இருந்தன. இவற்றில் 1,70,013 இடங்கள் நிரம்பின. 1,02,859 இடங்கள் காலியாக இருந்தன.
2014-15-ஆம் கல்வியாண்டில் 546 சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் 2,78,862 இடங்கள் இருந்தன. இவற்றில் 1,54,265 இடங்கள் நிரம்பின. 1,24,597 இடங்கள் காலியாக இருந்தன.
2015-16-ஆம் கல்வியாண்டில் 553 சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் 2,75,561 இடங்கள் இருந்தன. இவற்றில் 1,56,868 இடங்கள் நிரம்பின. 1,18,693 இடங்கள் காலியாக இருந்தன.
2016-17-ஆம் கல்வியாண்டுக்கான இந்த முழுமையான விவரத்தை தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வில் மட்டும் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளின் ஒரு லட்சம் இடங்கள் மாணவர் சேர்க்கை இன்றி காலியாக உள்ளன. எனவே, நிகழாண்டும் இதே நிலைதான் நீடிக்கும் என்கின்றனர் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலக அதிகாரிகள்.
இந்த மோசமான நிலைக்குத் தரமான பேராசிரியர்கள் பற்றாக்குறையே முக்கியக் காரணம் என்கின்றனர் கல்வியாளர்கள்.