இன்ஜி., கல்லூரிகளில் 'அட்மிஷன்' சரிவு ஏன்? : 5 லட்சம் பேருக்கு வேலை இல்லை

         தமிழகத்தில், இன்ஜினியரிங் படிப்பில், மாணவர்கள் அதிகளவில் சேராமல் புறக்கணித்ததற்கு, வேலைவாய்ப்பு இல்லாததே காரணம் என, தெரியவந்துள்ளது. 
 
         ஒவ்வொரு ஆண்டும், அண்ணா பல்கலை மூலம், இன்ஜி., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. 2 லட்சம் பேர் வரை, இன்ஜி., படிப்பில் சேர்ந்த காலம் மாறி, இந்த ஆண்டு வெறும், 90 ஆயிரம் பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். 1.02 லட்சம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், காலியாக கிடக்கின்றன.
நிலைமை மோசம் : இந்த மோசமான நிலையால், இன்ஜி., கல்லுாரிகளின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. கல்லுாரிகளை நடத்துவதா; வேண்டாமா என, ஆலோசனை நடத்தும் அளவுக்கும் நிலைமை மோசமாகி உள்ளது.
முன்னுரிமை : இந்த நிலைக்கு, இன்ஜி., படிப்புக்கு வேலைவாய்ப்புகள் சரிந்ததே காரணம் என, தெரிய வந்துள்ளது. பி.இ., - பி.டெக்., முடித்து, 2.45 லட்சம் பேர் வேலை இல்லாமல் உள்ளனர்.
எம்.இ., மற்றும் எம்.டெக்., முதுகலை படிப்பு முடித்து, 2.36 லட்சம் பேர் வேலையின்றி உள்ளதாக, வேலைவாய்ப்பு மைய தகவல்கள் தெரிவித்து உள்ளன. டிப்ளமோ இன்ஜி., படிப்பை முடித்த, 3.34 லட்சம் பேரும், வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து, கல்வியாளர்கள் கூறும்போது, 'இன்ஜி., பட்டதாரிகளுக்கு, தமிழக தொழிற்சாலைகளில் முன்னுரிமை தர வேண்டும். அவ்வாறு அளித்தால், வேலையில்லாதவர் எண்ணிக்கை கணிசமாக குறையும்' என்கின்றனர்.
இது தொடர்பாக, கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது: தற்போதுள்ள பாடத்திட்டம் மிக பழமையானது. தொழிற்சாலைகளில், தற்போதுள்ள தொழில்நுட்பத்துக்கும், பாடத்திட்டத்துக்கும் தொடர்பே இல்லை. வேலைவாய்ப்பு பெற, பட்டதாரிகளுக்கு பலதரப்பட்ட திறன் தேவைப்படுகிறது.
கூடுதல் உதவி : ஆனால், பல கல்லுாரி கள் வெறும் படிப்பை மட்டும் கற்றுத் தருகின்றன. புதிய தொழிற்சாலை கள் மற்றும், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு, அரசு கூடுதல் உதவிகள் அளிக்க வேண்டும். இதுபோன்ற மாற்றங்களை கொண்டு வந்தால், இன்ஜி., படிப்பை தமிழகத்தில் தரமாக்கலாம். இல்லையென்றால், இன்னும் சரிவு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
70 ஆயிரம் அதிகம்! : கடந்த, 2015 நிலவரப்படி, 4.46 லட்சம் பேர் வேலையின்றி இருந்தனர். இவர்களில், 2.21 லட்சம் பேர், எம்.இ., - எம்.டெக்., முடித்தவர்கள். மேலும், டிப்ளமோ இன்ஜி., முடித்தவர்கள், 3.15 லட்சம் பேருக்கு வேலை இல்லை. இந்த ஆண்டு, இன்ஜி., பட்டதாரிகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட, 70 ஆயிரம் அதிகரித்துள்ளது.