தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை:புதிய விதிகள் உருவாக்க 2ம் தேதி கூட்டம்

தனியார் மருத்துவ கல்லுாரிகளில், மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, புதிய விதிகள் உருவாக்குவதற்கான கூட்டத்தை, வரும், 2ம் தேதி, உயர் கல்வித்துறை நடத்துகிறது.

'நீட்' தேர்வு:தனியார் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, இந்த ஆண்டு, 'நீட்' தேர்வு கட்டாயமாகியுள்ளது. நீட் தேர்வு முடிவு, கடந்த வாரம் வெளியான நிலையில், மாணவர் சேர்க்கை எப்படி, கட்டணம் எவ்வளவு என்ற குழப்பம் நீடித்து வருகிறது. தனியார் நிகர்நிலை பல்கலைகள், மருத்துவ கல்லுாரிகள் மாணவர் சேர்க்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் இணைப்பில் உள்ள, தனியார் மருத்துவ கல்லுாரிகளில், மாணவர்களை எப்படி சேர்ப்பது, அதற்கான விதிகள் என்ன என்பதை முடிவு செய்ய, தமிழக உயர் கல்வித்துறை மூலமாக, கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது.
உத்தரவு:தமிழக தொழில்நுட்ப கல்வித்துறை அலுவலக அதிகாரிகள் குடியிருப்பில் உள்ள, உயர் கல்வி கட்டண கமிட்டி அலுவலக கட்டடத் தில், மருத்துவ விதிகள் கமிட்டியின் கூட்டம், செப்., 2ம் தேதி, பிற்பகல், 3:00 மணிக்கு நடக்கிறது. இதில், தனியார் மருத்துவ கல்லுாரிகள், சங்கங்கள் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என, தமிழக உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.