பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகுமா?:பெற்றோர், மாணவர், கல்வியாளர்கள் எதிர்பார்ப்பு

மருத்துவ படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவுத் தேர்வு கட்டாயமாகி விட்ட நிலையில், தமிழகத் தில், 10 ஆண்டுகள் பழமையான, பிளஸ் 2 பாடத் திட்டத்தை மாற்றுவது குறித்த அறிவிப்பு, சட்டசபையில் வெளியாகாததால், பெற்றோர், மாணவர் மற்றும் கல்வியாளர்கள் பாடத் திட்டம் மாற்றம் குறித்த அறிவிப்பு, எப்போது வெளியாகும் என்றும் காத்திருக்கின்றனர்.

தமிழக பள்ளி கல்வித் துறையில், ஒவ்வொரு வகுப்பின் பாடத் திட்டமும், ஐந்து ஆண்டுக ளுக்கு ஒரு முறை, தொழில்நுட்ப வளர்ச்சி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் புதுப்பிக்கப்படும். 20 ஆண்டு களாக, இந்த தொலைநோக்கு பார்வை மங்கி, பள்ளி கல்வியில் இலவசங் களை புகுத்தும் ஆர்வம், அதிகாரிகளிடம் அதிகரித்து உள்ளது.

தற்போதைய, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத் திட்டம், 2007ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. அது, 2005ம் ஆண்டில் தயார் செய்யப்பட்டதால், இந்த பாடத் திட்டத்தின் ஆயுட்காலம், 11 ஆண்டு களை எட்டி விட்டது. 2012ல், ஐ.ஐ.டி., பேராசிரியர் நாகபூஷன ராவ் தலைமையில், தமிழக அரசு அமைத்த கமிட்டி, புதிய பாடத் திட்டத்தை உருவாக்கியது. இது, 2013ல், தமிழக அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப் பட்டது.