பிளஸ்-2 பாடத்திட்டத்தை மாற்றாவிட்டால்
‘நீட்’ தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறுவது சிரமம். இதற்காக சிறப்பு
வகுப்புகள் நடத்துவதால் எந்தவித மாற்றமும் வராது என்று கல்வியாளர்கள்
ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
மருத்துவ நுழைவுத்தேர்வு
சமீபத்தில் ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு, ‘நீட்’
எனப்படும் அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத்தேர்வு ஆகியவை நடத்தப்பட்டன.
இந்ததேர்வுகளில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களில் சி.பி.எஸ்.இ. படித்தவர்கள்
ஓரளவு பங்கேற்றனர். மாநில கல்வி திட்டத்தில் படித்தவர்களில் வெகுசிலர்
மட்டுமே கலந்துகொண்டனர்.
ஆனால் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில்
அந்த மாநில அரசு பின்பற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டங்களில் படித்த
மாணவ-மாணவிகள் அதிக எண்ணிக்கையில் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழக மாநில கல்வி திட்டத்தில் படித்த
மாணவர்களும் ‘நீட்’ தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு என்ன
செய்யவேண்டும்? என்று கேட்டதற்கு தமிழ்நாடு உயர்நிலை மற்றும்
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாநில தலைவர் சாமி சத்தியமூர்த்தி
கூறியதாவது:-
பாடத்திட்டத்தை மாற்றவேண்டும்
தமிழகத்தில் இப்போது நடைமுறையில் உள்ள
பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டம் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு தயாரித்தது.
இன்றைய சூழ்நிலை, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப உடனடியாக புதிய
பாடத்திட்டத்தை தயாரிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பிளஸ்-1 பாடங்களுக்கு
முக்கியத்துவம் அளிப்பதே இல்லை. ஆனால் ‘நீட்’ தேர்வில் பிளஸ்-1 வகுப்பில்
இருந்துதான் அதிக கேள்விகள் கேட்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் பெயர் அளவில் தான் பிளஸ்-1
வகுப்புகள் நடத்தப்பட்டு, தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. எனவே பிளஸ்-1,
பிளஸ்-2 பாடத்திட்டத்தை உடனே மாற்றவேண்டும். பாடத்திட்டத்தை மாற்றாதவரை
‘நீட்’ தேர்விலும், ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்விலும் தமிழகத்தை சேர்ந்த மாநில
கல்விமுறையில் படித்த மாணவ-மாணவிகள் வெற்றிபெறுவது சிரமம்.
சிறப்பு வகுப்புகள்
பள்ளிக்கல்வி இயக்குனரகம் ‘நீட்’ தேர்வுக்கு
சிறப்பு வகுப்புகள் நடத்தினாலும் வெற்றிபெறுவது சிரமம். சிறப்பு
வகுப்புகளால் எந்த மாற்றமும் வராது.
இவ்வாறு சாமி சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதே கருத்தை தமிழக கல்வியாளர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.