பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.230 கோடியில் புதிய திட்டங்கள்: மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அறிவிப்பு

பள்ளிக் கல்வித் துறைக்கென ரூ.230 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதன்படி, மாணவர்களுக்கு வரைபட பயிற்சித் தாள், கணித-அறிவியல் உபகரணப்
பெட்டிகள், பொது அறிவுப் புத்தகங்கள் ஆகியன அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித் துறை தொடர்பாக, பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை படித்தளித்த அறிக்கை:-
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி ஆகிய 10 மாவட்டங்களிலுள்ள பள்ளிகளில் எளிமையாகப் பாடங்கள் பயிற்றுவிக்க வசதியாக செயல்வழிக் கற்றல் அட்டைகள் அளிக்கப்படும்.
அரசு-அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 முதல் 5-ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடத்துக்கான வரைபட பயிற்சித் தாள் அளிக்கப்படும். இதன்மூலம், வாழும் இடம், திசைகள், சுற்றுப்புறம், ஆறுகள், மலைகள் அட்ச ரேகை, தீர்க்க ரேகை ஆகியவற்றை அறிய முடியும்.\

கணித-அறிவியல் பெட்டிகள்: அரசு-அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1, 2, 6, 7, 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் கணித உபகரணப் பெட்டிகளும், 6, 7, 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் உபகரணப் பெட்டிகளும், 3, 4, 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாசிப்புத் திறனை மேம்படுத்த புத்தகங்களும் அளிக்கப்படும்.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3 கணினிகள் கொண்ட கற்றல் மையங்கள் உருவாக்கப்படும். அறிவியல்-கணித பாடங்களில் உள்ள கடின பகுதிகளை எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில், புதிய தொழில்நுட்பங்களான தொடு திரை, காணொலிக் காட்சி, பல்லூடகம் (மல்டி மீடியா) போன்றவைகளால் கற்றல்-கற்பித்தல் முறைகள் மேம்படுத்தப்படும். பின்னணி குரலுடன் கூடிய அசைவூட்டும் காணொலி தொகுப்புகளும் அளிக்கப்படும். அவை 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கொடுக்கப்படும்.
வருகைப் பதிவு: மாணவர்-ஆசிரியர்கள் வருகைப் பதிவேடு முறை இனி பயோ-மெட்ரிக் அடிப்படையில் செயல்படுத்தப்படும். மாணவர்கள் புதிய முறையில் கல்வி கற்பதற்கு வசதியாக, வகுப்பறைகளில் உள்ள சுவர்களில் பாடம் தொடர்புடைய வண்ணச் சுவர் சித்திரங்கள் வரையப்படும்.

தமிழக மாணவர்களுக்கு ஒரே வகையான தரமான கற்றல்-கற்பித்தலைக் கொண்டு சேர்க்க மெய்நிகர் வகுப்பறைகள் (யஐதபமஅக இகஅநந தஞஞஙந) ஏற்படுத்தப்படும். முதல்கட்டமாக 770 அரசுப் பள்ளிகளிலும், 11 மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களிலும் உருவாக்கப்படும்.

மேலும் 11 மைய ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களில் இருந்து நடத்தப்படும் வகுப்பறை செயல்பாடுகள், கிராமப்புறப் பகுதிகளிலுள்ள அனைத்து மாணவர்களும் காண வழி செய்யப்படும். இந்த திட்டத்தைச் செயல்படுத்த கோவை, பெரம்பலூர், தருமபுரி மாவட்ட பயிற்சி நிறுவனங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் 11 அறிவிப்புகளின் மூலம் ரூ.230.74 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார்.
நல்லாசிரியர் விருதுக்கு ரூ.10 ஆயிரம் நல்லாசிரியர் விருதுக்கான ரொக்கப் பரிசு ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களை பாராட்டும் வகையில், நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இவர்களுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசுடன், பதக்கம், சான்றிதழ் அளிக்கப்படுகிறது. ஆசிரியர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில், இனி ரொக்கப் பரிசு ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும்.


மாணவர்களுக்கு மழைக்கோட்டு, பூட்ஸ்...: மலைப் பிரதேசங்களில் வாழும் மாணவர்கள் மழைக் காலங்களில் பாதிப்பின்றி பள்ளிக்குச் சென்று வர வசதியாக மழைக்கோட்டு, பூட்ஸ், காலுறைகள் வழங்கப்படும். ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான அரசு-அரசு உதவி பெறும் மாணவ-மாணவியருக்கு அவை அளிக்கப்படும் என்றார்.