மாணவர்கள் பிறந்த நாளிலும் சீருடை அணிவது கட்டாயம்; கல்வித்துறை உத்தரவு

பள்ளிக்கு வரும் மாணவர்கள், பிறந்த நாளாக இருந்தாலும் சீருடையில் வர வேண்டும். மொபைல் போன், இரு சக்கர வாகனங்கள் கொண்டு வருவதற்கு தடை உள்ளிட்ட, 11 விதிகளை பின்பற்ற வேண்டுமென, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும், பள்ளி துவங்கி இரு மாதங்கள் ஆகிவிட்டன. மாணவர் சேர்க்கை, வளாக பராமரிப்பு, கல்வி திட்டங்கள் பின்பற்றுதல் உள்ளிட்ட, பல்வேறு நடைமுறைகளுக்கு, கல்வித்துறை சார்பில், விதிமுறைகள் வகுக்கப்பட்டு, அறிவுறுத்துவது வழக்கம். மாணவர்கள் ஒழுக்க நெறிமுறைகள் பின்பற்றுவதை, கட்டாயமாக்கும் விதமாக, பள்ளிக்கல்வித்துறை சார்பில், அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதில், கல்லுாரி மாணவர்களை போல, மேல்நிலை வகுப்பு மாணவர்களும், முறுக்கு மீசை வைத்து, கடுக்கன் அணிந்து பள்ளிக்கு வருகின்றனர். இது, மாணவர்களுக்கான ஒழுக்க நெறிமுறைகளில் இருந்து மீறும் செயலாகும். இதனால், மாணவர்கள் சீருடை அணியும் முறை, இறுக்கமில்லாத அரைக்கை சட்டை மட்டும் அணிதல், தலைமுடி வெட்டுதல், கைகளில் ரப்பர் பேண்டு, செயின் அணிந்து பள்ளிக்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், பிறந்த நாளாக இருந்தாலும், சீருடையில் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும். விடுப்பு எடுப்பதாக இருந்தால், பெற்றோர் கையெழுத்தோடு, வகுப்பு ஆசிரியரின் ஒப்புதல் பெறுவது கட்டாயம் என, 11 விதிமுறைகள் வகுக்கப்பட்டு, தலைமையாசிரியர்கள் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கூறுகையில்,'கல்வித்துறை அறிவித்துள்ள நெறிமுறைகளை மாணவர்களுக்கு எடுத் துக்கூறியுள்ளோம். 'இருசக்கர வாகனங்களில் வர தடை விதிக்கப்பட்டுள்ளதால், பெற்றோருக்கு தெரியப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகள் மீறும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்