இந்திய கடற்படையில் 262 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 10-ம் வகுப்பு படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

கடற்படையில் 262 வேலைவாய்ப்புகள் 10-ம் வகுப்பு படிப்பு தகுதி

இந்திய கடற்படையில் 262 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 10-ம் வகுப்பு படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரம் வருமாறு:- இந்திய கடற்படையின் தெற்கு கமாண்டிங் அலுவலகமான கொச்சி கிளையில் ‘மல்டி டாஸ்கிங் ஸ்டாப்’ (குரூப்-சி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பியூன், வாட்ச்மேன், சபாய்வாலா உள்ளிட்ட பணியிடங்களுக்கு மொத்தம் 262 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் சபாய்வாலா பணிக்கு 157 இடங்களும், வாட்ச்மேன் பணிக்கு 35 இடங்களும், பியூன் பணிக்கு 54 இடங்களும் உள்ளன. முடி திருத்துபவர் உள்ளிட்ட இதர பணிகளுக்கு 16 இடங்கள் உள்ளன.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... வயது வரம்பு: 27 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித் தகுதி: மெட்ரிகுலேசன் (10-ம் வகுப்பு) தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் சபாய்வாலா, பியூன், வாட்ச்மேன் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், குறிப்பிட்ட பணி அனுபவம் உள்ளவர்கள் டோபி, பார்பர், டிரெஸ்ஸர், லேப் அட்டன்ட் போன்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யும் முறை: எழுத்து தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் வெள்ளைக் காகிதத்தில் குறிப்பிட்ட மாதிரியில் விண்ணப்ப படிவம் தயார் செய்ய வேண்டும். அதில் புகைப்படங்கள் ஒட்டி, விவரங்களை நிரப்புவதுடன், கூடுதல் புகைப்படங்கள் மற்றும் சான்றிதழ் நகல்கள் இணைத்து சுய சான்றொப்பம் செய்து அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் கொச்சி, கடற்படை கமாண்டிங் அலுவலக முகவரிக்கு அறிவிப்பில் இருந்து 28 நாட்களுக்குள் சென்றடையும்படி அனுப்ப வேண்டும். இது பற்றிய அறிவிப்பு ஜூலை 9-15 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. விரிவான விவரங்களை அந்த இதழில் பார்க்கலாம்.