பிளஸ் 2 விடைத்தாள் திருத்தத்தில் குளறுபடி : 500 ஆசிரியர்களிடம் விசாரணை

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தத்தில், குளறுபடிகள் நடந்துள்ளது தொடர்பாக, 500 ஆசிரியர்களிடம் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில், 3,500 மாணவர்கள், 'எங்கள் விடைத்தாள்கள் சரியாக திருத்தம் செய்யப் படவில்லை' எனக் கூறி, மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தனர். இவர்களில், 2,400 பேரின் விடைத்தாள்களில் வழங்கப்பட்ட மதிப்பெண்ணில் மாற்றம் ஏற்பட்டது.

தேர்வுத்துறை இயக்குனர் தலைமையிலான குழுவால், மதிப்பெண் மாறிய விடைத்தாள்கள் ஆய்வு செய்யப்பட்டன. விடைத்தாள்களில், சில பக்கங்களுக்கு மதிப்பெண் வழங்கப்படாதது; சில பக்கங்களை திருத்தாமல் விட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட விடைத்தாள்களை திருத்திய ஆசிரியர் களின் பட்டியலை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், தேர்வுத்துறை இயக்குனரகம் சேகரித்துள்ளது. அதில், இடம் பெற்றுள்ள அரசு பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த, 500 ஆசிரியர்களிடம் முதற்கட்ட விசாரணை துவங்கியுள்ளது. ஆசிரியர்களிடம் அவர்கள் திருத்திய விடைத்தாள்களை கொடுத்து, குளறுபடிக்கு காரணம் என்ன என கேட்டு, எழுத்துப்பூர்வ விளக்கம் பெறப்படுகிறது. ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, அது அறிக்கையாக தயார் செய்யப்படுகிறது. 'ஆசிரியர்கள் அளிக்கும் விளக்கம் ஏற்புடையதாக இல்லாவிடில், 'மெமோ' கொடுத்தல்; ஊக்க ஊதியம் ரத்து, 'சஸ்பெண்ட்' போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், ஆசிரியர் சங்கங்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.
My Blogger Tricks