'உண்மை தன்மை சான்றிதழ்' தாமதத்தால் ஆசிரியர்கள் தவிப்பு

ஆசிரியர்களுக்கு உண்மை தன்மை சான்றிதழ்கள் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதால் பணப் பலன்கள் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.



தமிழகத்தில் தொகுப்பூதிய ஆசிரியர்கள் 40 ஆயிரத்து 500 பேர் உள்ளனர். இவர்களுக்கு 2006 ஜூன் 1ல் காலமுறை ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஒரே நிலையில் பத்தாண்டுகள் பணிபுரிந்தால் 'தேர்வு நிலை'யும், 20 ஆண்டுகள் பணிபுரிந்தால் 'சிறப்பு நிலை' தகுதிகளும் வழங்கப்பட்டது. ஆறு சதவீத ஊதிய உயர்வும் வழங்கப்பட்டது.
பள்ளிக் கல்வித்துறையில் தேர்வான ஆசிரியர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் பள்ளிகள் மூலம் முதன்மை கல்வி அலுவலகத்திற்கு உண்மை தன்மை சான்றிதழ் விபரங்கள் அனுப்பப்பட்டன. தொடக்க கல்வித்துறையில், உதவி தொடக்க கல்வி அலுவலர் மூலம் உத்தரவுகள் வழங்கப்பட்டன.
இந்த ஆசிரியர்களுக்கு 'உண்மை தன்மை சான்றிதழ்' இல்லாத காரணத்தால் விபரங்களை முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்பாமல் தலைமை ஆசிரியர்கள் தாமதப்படுத்தினர். இதனால் ஆசிரியர்களுக்கு பணப்பலன்கள் கிடைக்கவில்லை. இயக்குனரகம், விபரங்களை சேகரிக்க சிறப்பு முகாம்கள் நடத்த முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டது. இந்த முகாம்கள் திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறவில்லை.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறியதாவது: தமிழகத்தில் மாவட்டத்திற்கு தலா 900 தொகுப்பூதிய ஆசிரியர்கள் பணப்பலன்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர், என்றார்.