இன்ஜினியரிங் கவுன்சிலிங் தரவரிசை இன்று வெளியீடு

அண்ணா பல்கலையின் இன்ஜி., கவுன்சிலிங்குக்கு 'கட் - ஆப்' மதிப்பெண்படி, தரவரிசை பட்டியல், இன்று வெளியாகிறது. அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிக்க, இந்த ஆண்டு, 1.35 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கான, 'ரேண்டம்' எண், நேற்று முன்தினம் வெளியானது.
இந்நிலையில், மாணவர்களின், 'கட் - ஆப்' மதிப்பெண் அடிப்படையிலான, தரவரிசைப் பட்டியல், இன்று காலை வெளியிடப்பட உள்ளது. இதில், பொது தரவரிசை மற்றும் வகுப்பு வாரியான தரவரிசை என, இரண்டு பட்டியல் வெளியாகும். இதில், ஜாதி வாரியான தரவரிசைப்படியே, மாணவர்கள் சேர்க்கப்படுவர். ஒரே, 'கட் - ஆப்' மதிப்பெண் உள்ளவர்களுக்கு, அவர்களின் பாட மதிப்பெண்கள், பிறந்த தேதி மற்றும், 'ரேண்டம்' எண் அடிப்படையில், தரவரிசை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தொழிற்கல்வி பிரிவு, விளையாட்டு பிரிவு, முன்னாள் ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு, தனி தரவரிசை வெளியிடப்படும். பொது தரவரிசையில், முதல், 50 இடங்களுக்குள் இருப்பவர்களில் பலர், உயிரியல் பாடப்பிரிவினராக இருந்தால், அவர்கள் மருத்துவ கல்லுாரிகளில் சேர வாய்ப்பு உள்ளது.