டான்செட் தேர்வு முடிவுகள் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும்: அண்ணா பல்கலைக்கழகம்

முதுநிலை பொறியியல், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) முடிவுகள் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

 தமிழகத்தில் அரசு,அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை "டான்செட்' நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது.
2016 ஆண்டுக்கான இந்தத் தேர்வில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. சேர்க்கைக்கான தகுதித் தேர்வு சனிக்கிழமையும், எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க். உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான தேர்வு இன்று நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 34 தேர்வு மையங்களில் இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. சென்னையில் 10 மையங்களில் நடந்தது.
எம்.பி.ஏ.-வுக்கான தேர்வு எழுத 16,536, எம்.சி.ஏ. தேர்வுக்கு 7 ஆயிரம் பேரும், முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு 17,055 பேர் என மொத்தம் 40,591 பேர் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 85 சதவீதத்தினர் மட்டுமே தேர்வெழுதினர்.
இந்தத் தேர்வு முடிவுகள் அடுத்த இரண்டு வாரங்களில் வெளியிடப்பட்டு விடும். இந்த தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் மாணவர் சேர்க்கைக்கு, தனியாக விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
அதற்கான அறிவிப்பும், கலந்தாய்வு தேதியும் பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.