இன்ஜி., கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் வெளியிட தயக்கம்! அரசு அனுமதி மறுப்பால் அண்ணா பல்கலை மவுனம்

தமிழகத்தில் இந்த ஆண்டு, 200 இன்ஜி., கல்லுாரிகளில் மாணவர்கள் தேர்ச்சி, 50 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. 
 
           எனவே, கல்லுாரிகளின் தரவரிசை பட்டியல் வெளியிடுவதை, அண்ணா பல்கலை நிறுத்தி வைத்துள்ளது.தனியார் கல்லுாரிகளின் நெருக்கடி மற்றும் தமிழக உயர் கல்வித்துறை வற்புறுத்தலால், இந்த விஷயத்தில் அண்ணா பல்கலை மவுனமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேசிய அளவில், தமிழகத்தில் தான் அதிக அளவில், இன்ஜி., கல்லுாரிகள் இயங்குகின்றன. பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., போன்ற தொழில் நுட்ப படிப்புகள் படிக்க, 550 கல்லுாரிகள்உள்ளன. தென் மாநிலங்களில், பெரிய மாநிலமான ஆந்திராவில் கூட, 328 கல்லுாரிகள் தான் உள்ளன.இன்ஜி., கல்லுாரிகளுக்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்விகவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ., யின் அங்கீகாரம் தரப்படுகிறது. அண்ணா பல்கலையில்இருந்து இணைப்பு அந்தஸ்துதரப்பட்டு,பாடத்திட்டங்கள்பின்பற்றப்படுகின்றன.தமிழகத்தில், 50 சதவீத இன்ஜி., கல்லுாரிகளில் ஏ.ஐ.சி.டி.இ., விதிகளின்படி, பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. தகுதியான பேராசிரியர் இல்லாதது; உள்கட்டமைப்பு குறைவு; பாடத்திட்டத்தில் தற்காலத்துக்கு ஏற்ற மாற்றம் இல்லாதது போன்ற காரணங்களால், கல்லுாரிகளின் செயல்பாடுகளிலும் தரம் குறைந்துள்ளதாக, ஏ.ஐ.சி.டி.இ.,யின் தென்னிந்திய கூட்டத்தில் கல்வியாளர்கள் கவலை தெரிவித்தனர்.

மாணவர்சேர்க்கையின் போது, கல்லுாரிகளின் தரம் குறித்து, மாணவர்கள் அறிந்து கொள்ள ஏதுவாக, கல்லுாரிகளின் மாணவர் தேர்ச்சி விகித தரப்பட்டியல், இரண்டு ஆண்டுகளாக அண்ணா பல்கலையால் வெளியிடப்படுகிறது. இதன் அடிப்படையில், தரமான கல்லுாரிகளை மாணவர்கள் தேர்வு செய்து, இன்ஜி., படிப்பில் சேர்ந்தனர்.'இந்த ஆண்டு தரவரிசை பட்டியல் எப்போது வரும்?' என, மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஆனால், தரவரிசை பட்டியல் வெளியீடு திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 'தமிழக அரசின் உயர் கல்வித்துறையில்இருந்து அனுமதி கிடைக்காததால், பட்டியல் வெளியாக வாய்ப்பில்லை' என, தொழில்நுட்ப கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ஆனால், மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில், 'தரவரிசை பட்டியலை கண்டிப்பாக வெளியிட வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது. பல லட்சம் ரூபாய் செலவு செய்து படிக்கும்மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, தரவரிசை பட்டியலுக்கு தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பேராசிரியர்கள் பற்றாக்குறை

உயர் கல்வித்துறை வட்டாரங்கள் கூறிய தாவது: எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு, இன்ஜி., கல்லுாரிகளில் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. குறிப்பாக,

* 200 கல்லுாரிகளில், 50 சதவீதம் பேர் ஏதாவது, ஒரு பாடத்தில் தோல்வி அடைந்துள்ளனர்

* அண்ணா பல்கலை அறிமுகப்படுத்திய புதிய வினாத்தாள் முறையை பின்பற்ற முடியாமல், பல கல்லுாரிகளில் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது

* சில கல்லுாரிகளில் குறைந்த சம்பளம் என்பதால், ஆசிரியர் பலர் வேலையை விட்டு வெளியேறி விட்டனர். பேராசிரியர் பற்றாக்குறையால், பாடம் நடத்துவது பாதிக்கப்பட்டு, சில கல்லுாரிகளில் தேர்ச்சி குறைந்துள்ளது

* இந்த நிலையில், தரவரிசை பட்டியல் வெளியானால், பல இன்ஜி., கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை பாதிக்கப்படும்.அதனால், 'பட்டியலை வெளியிட வேண்டாம்' என, கல்லுாரிகள் கேட்டுக் கொண்டுள்ளன. எனவே, தரவரிசை பட்டியலை வெளியிட உயர் கல்வித்துறை இதுவரை அனுமதி அளிக்கவில்லை.

இவ்வாறு உயர் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.