எம்.பி.பி.எஸ்.: முன்னிலை பெற்ற மாணவர்களுக்கு அனுமதிக் கடிதம் வழங்கினார் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்:731 இடங்கள் நிரம்பின

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு செவ்வாய்க்கிழமை கலந்தாய்வு தொடங்கியது. முதல் நாளிலேயே 731 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரம்பின. முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு சேர்க்கைக்கான அனுமதி கடிதங்களை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.

2016- 2017-ஆம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் 2,383 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான 470 இடங்கள், அரசு பல் மருத்துவ இடங்கள் 85, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான 970 பல் மருத்துவ இடங்கள் ஆகியவற்றுக்கு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
முதல் நாளில் நடைபெற்ற சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் 68 எம்.பி.பி.எஸ். இடங்களும், ஒரு அரசு பல் மருத்துவ இடமும் நிரம்பியது.
பொதுப்பிரிவினருக்கு: செவ்வாய்க்கிழமை தொடங்கிய பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வில் பங்கேற்க 737 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 732 பேர் கலந்தாய்வில் பங்கேற்றனர். முடிவில், 727 மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளையும், 4 மாணவர்கள் தனியார் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு இடங்களையும் தேர்வு செய்தனர். பொதுப் பிரிவினருக்கான முதல் நாள் கலந்தாய்வில் மொத்தம் 731 இடங்கள் நிரம்பின.
முன்னதாக எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சேர்கைக்கான அனுமதிக் கடிதத்தை வழங்கினார். முதல் 10 இடங்களைப் பிடித்த அனைத்து மாணவர்களும் சென்னை மருத்துவக் கல்லூரியையே தேர்வு செய்தனர்.
தோழிக்கும் இடம்: சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வில் திங்கள்கிழமை பங்கேற்று, தனது தோழிக்கு சென்னை மருத்துவக் கல்லூரி இடத்தை விட்டுக் கொடுத்த திருச்சியைச் சேர்ந்த மாணவி வர்ஷினிக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் அதே கல்லூரியில் இடம் கிடைத்தது. பொது தர வரிசைப் பட்டியலில் 140-ஆவது இடத்திலும், பிற்படுத்தப்பட்டோருக்கான தரவரிசையில் 96-ஆவது இடத்திலும் இருந்த அவருக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது.
2-ஆவது நாள் கலந்தாய்வு: புதன்கிழமை நடைபெறவுள்ள 2-ஆவது நாள் கலந்தாய்வில் பங்கேற்க 197.75-லிருந்து 197 வரை கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ள 850 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும். வரும் 25-ஆம் தேதி வரை தொடர்ந்து கலந்தாய்வு நடைபெறும் என்று தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
696 பேருக்கு தரவரிசையில் மாற்றம்
பிளஸ் 2 மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பித்தவர்களில் 696 மாணவர்களின் தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 17-ஆம் தேதி வெளியிடப்பட்டது. 25,379 பேருக்கு வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் ஜூன் 20-ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்ணுக்கான மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டதைடுத்து, மாணவர்களின் மதிப்பெண்ணும், கட்-ஆஃப் மதிப்பெண்ணிலும் மாற்றம் ஏற்பட்டது. அதன்படி எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களில் இயற்பியல் பாடத்தில் 199 பேரின் மதிப்பெண் அதிகரித்துள்ளது, 29 பேரின் மதிப்பெண் குறைந்துள்ளது. வேதியியல் பாடத்தில் 128 பேரின் மதிப்பெண் குறைந்துள்ளது, 18 பேரின் மதிப்பெண் அதிகரித்துள்ளது.
உயிரியல் பாடத்தில் 259 பேரின் மதிப்பெண் அதிகரித்துள்ளது, 55 பேருக்கு குறைந்துள்ளது. தாவரவியல் பாடத்தில் ஒரு மாணவரின் மதிப்பெண் குறைந்துள்ளது. விலங்கியல் பாடத்தில் 4 மாணவர்களின் மதிப்பெண் அதிகரித்துள்ளது. கணிதப் பாடத்தில் 129 பேரின் மதிப்பெண் அதிகரித்துள்ளது, 20 பேரின் மதிப்பெண் குறைந்துள்ளது.