தமிழகத்தில் உயர் கல்வி சேர்க்கை 44.8 சதவீதமாக உயர்வு

தமிழகத்தின் ஒட்டுமொத்த உயர்கல்வி சேர்க்கை (ஜி.இ.ஆர்.) 44.8 சதவீதமாக உயர்ந்துள்ளது என, மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறினார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு ஏற்பாடுகள் குறித்து, பதிவாளர் கணேசனிடம் அன்பழகன் சனிக்கிழமை கேட்டறிந்தார்.

பின்னர் அமைச்சர் மேலும் கூறியதாவது: உயர் கல்வித் துறை மேம்பாட்டுக்காக தமிழக அரசு சிறந்த திட்டங்களை வகுத்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 67 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. 527 பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் 2 லட்சம் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 24-இல் தொடங்குகிறது.
இதற்காக விண்ணப்பித்துள்ள 1,34,722 பேருக்கு சமவாய்ப்பு எண் ஜூன் 20-ஆம் தேதியும், தரவரிசைப் பட்டியல் 22-ஆம் தேதியும் வெளியிடப்படும். பின்னர், 24-இல் விளையாட்டுப் பிரிவினருக்கும், 25-இல் மாற்றுத்திறனாளிகளுக்கும் சேர்க்கை நடைபெறும். 27-ஆம் தேதி முதல் பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கப்படும்.
கலந்தாய்வுக்கான அழைப்பக் கடிதம் தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது. பல்கலைக்கழக இணையதளத்தில் பெயர், பிறந்த தேதி, விண்ணப்ப பதிவு எண் ஆகியவற்றை பதிவு செய்து ஆன்-லைனில் இருந்தே அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்றார்.