இன்ஜி., 'கட் - ஆப்' மதிப்பெண் பட்டியல் வெளியீடு: தொழில்நுட்ப கோளாறால் மாணவர்கள் தவிப்பு

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட, இன்ஜி., கல்லுாரிகளின் கடந்த ஆண்டு, 'கட் - ஆப்' மதிப்பெண் வெளியிடப்பட்டு உள்ளது. ஆனால், தொழில்நுட்ப கோளாறால், இணையதளத்தில் மதிப்பெண்ணை பார்க்க முடியாமல், மாணவர்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

அண்ணா பல்கலைக்குட்பட்ட, 550 இன்ஜி., கல்லுாரிகளின் மாணவர் சேர்க்கை, தமிழக அரசு சார்பில், ஒற்றை சாளர கவுன்சிலிங் மூலம் நடத்தப்படுகிறது. அண்ணா பல்கலையில், இந்த கவுன்சிலிங் நடக்க உள்ளது.
தற்போது, 'ஆன்லைன்' பதிவு மூலம், இன்ஜி., விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. அண்ணா பல்கலையின், https:/www.annauniv.edu/tnea2016 இணையதளத்தில், மாணவர்கள் தங்களின் விவரங்களை பதிவு செய்யலாம். பின், ஆன்லைனில் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி, விண்ணப்பத்தை நகல் எடுத்து, உரிய சான்றிதழ் நகலுடன், தமிழக இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலருக்கு, தபாலில் அனுப்ப வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்ய, மே 24ம் தேதி கடைசி நாள். விண்ணப்பங்கள், மே 27ம் தேதிக்குள், அண்ணா பல்கலைக்கு கிடைக்கும் வகையில், தபாலில் அனுப்ப வேண்டும்.
இதற்கிடையே, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளதால், கடந்த ஆண்டின், கட் - ஆப் மதிப்பெண்ணை அண்ணா பல்கலை வெளியிட்டு உள்ளது. ஒவ்வொரு இன்ஜி., கல்லுாரியும், கடந்த ஆண்டு, எந்த கட் - ஆப் மதிப்பெண் வரை, மாணவர்களை சேர்த்தது என்ற விவரம், கல்லுாரி வாரியாக, மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டு உள்ளது.
இதன்படி, மாணவர்கள் தங்களின் தற்போதைய, கட் - ஆப் மதிப்பெண்ணின் படி, எந்த கல்லுாரியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
இந்த கட் - ஆப் மதிப்பெண்ணை பார்க்க, மாணவர்களும், பெற்றோரும் முயற்சித்தனர். ஆனால், இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், நேற்று இரவு வரை, மதிப்பெண் பட்டியலை பார்க்க முடியாமல் தவித்தனர்.
நேற்று மாலை வரை, இன்ஜி., படிப்பில் சேர, 2 லட்சத்து, 7,512 பேர், ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். ஆனால், 1.36 லட்சத்து, 364 பேர் மட்டுமே விண்ணப்ப கட்டணம் செலுத்தி, விண்ணப்பங்களை தபாலில் அனுப்பியுள்ளனர்.