அதிரடி! பொது நுழைவுத் தேர்வை தள்ளிவைக்க அவசர சட்டம் ?

புதுடில்லி,:'தேசிய அளவிலான நுழைவுத் தேர்வா? மாநில அளவிலான நுழைவுத் தேர்வா?' என, கடந்த இரண்டு மாதங்களாக மிகுந்த போராட்டத்தில் இருந்த, மருத்துவக் கல்லுாரி யில் சேரத் துடிக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சி
அளிக்கும் வகையில், மாநில அளவிலான நுழைவுத் தேர்வை இந்த ஆண்டு நடத்தும் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள, 400க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையை, தேசிய பொது நுழைவுத் தேர்வு மூலமே நடத்த வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம் தீர்ப்பு அளித்தது.அதன்படி, மே, 1ல், முதற்கட்ட நுழைவுத் தேர்வையும், ஜூலை, 24ல், இரண்டாம் கட்ட நுழைவுத் தேர்வையும் நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. மே, 1ல் நடந்த நுழைவுத் தேர்வை, ஆறரை லட்சம் மாணவர்கள் எழுதினர்.

கோரிக்கை: இந்த நிலையில், 'போதிய கால அவகாசம் இல்லாததால் மாணவர்களின் வசதிக் காக, இந்த ஆண்டு மாநில அளவிலான நுழைவுத் தேர்வை நடத்த அனுமதிக்க வேண்டும்' என, மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்கள் கோரிக்கை விடுத்தன.தமிழகத்தில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வில் மாணவர்களின் மதிப்பெண்
அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதிக்க வேண்டும்' என, தமிழக அரசும்
'கோரிக்கை வைத்தது.

'மாநில அளவிலான நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு அனுமதிக்க முடியாது. எல்லா மாநிலங் களிலும்அனைத்து மருத்துவக் கல்லுாரிகளுக்கும் தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கையை நடத்தவேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் தனது உத்தரவில் கூறியது.

இந்த நிலையில், டில்லியில் நேற்று முன்தினம் நடந்த, மாநில சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் இந்த பிரச்னை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

மாநில அளவிலான நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு அவசர சட்டம் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, பல்வேறு கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனை செய்தது.

பிரதமர் தலைமையில்...: இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், இந்த ஆண்டு மாநில அளவிலான மருத்துவ நுழைவுத் தேர்வை நடத்தும் வகையில் அவசர சட்டம் கொண்டு வர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி யின் ஒப்புதலுக்குப் பின், இந்த அவசர சட்டம் அமலுக்கு வரும்.

அமைச்சர் விளக்கம்: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, டுவிட்டரில் கூறியதாவது: நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அறிமுகம் செய்யப்பட்ட தேசிய பொது நுழைவுத் தேர்வு தற்போது அமலில் உள்ளது. அதை ரத்து செய்யவில்லை. முதல் கட்டத் தேர்வு, மே, 1ல் முடிந்தது; இரண்டாம் கட்ட தேர்வு, ஜூலை, 24ல் நடக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மாணவர்கள் மகிழ்ச்சி:
* மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள அவசர சட்டத்தின்படி, தேசிய
அளவிலான மருத்துவ நுழைவுத் தேர்வு ஓராண்டுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது
* இந்த ஆண்டு மட்டும், மாநில அளவிலான நுழைவுத் தேர்வை நடத்திக் கொள்ளலாம். அடுத்த ஆண்டு முதல் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு முறை அமலுக்கு வரும்
* மாநில அளவிலான நுழைவுத் தேர்வு முறை வருவது மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
* தேசிய அளவிலான நுழைவுத் தேர்வை விட, மாநில அளவிலான நுழைவுத் தேர்வு சற்று எளிமையாக இருக்கும்; மேலும் தாய்மொழி யிலும் தேர்வை எழுதலாம் என்பது மாணவர் களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேல்முறையீடு? :
அவசர சட்டம் நடை முறைக்கு வந்தால் அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாக, சங்கல்ப் என்ற அரசு சாரா அமைப்பு தெரிவித்துள்ளது.

தேசிய அளவிலான நுழைவுத் தேர்வை இந்த ஆண்டு நடத்துவதற்கு உத்தரவிடக் கோரி, இந்த அமைப்பு தான் வழக்கு தொடர்ந்தது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக அவசர சட்டம் அமைவதால் அதை எதிர்த்து வழக்கு தொடரப் போவதாக இந்த அமைப்பினர் தெரிவித்தனர்.