பி.இ., 2ம் ஆண்டு சேர்க்கை'ஆன்லைனில்' விண்ணப்பம்

காரைக்குடி, : -பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.டிப்ளமோ மற்றும் பி.எஸ்சி., முடித்தவர்கள், பி.இ., - பி.டெக்., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்ந்து படிப்பதற்கான, விண்ணப்ப வினியோகம், ஒவ்வொரு ஆண்டும் மே,
இரண்டா-வது வாரத்தில் துவங்கும். கடந்த ஆண்டு மே, 13-ம் தேதி, தமிழகம் முழுவதும் உள்ள, 34 மையங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.
டிப்ளமோவில் ஆறு பருவத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில், 'ரேங்கிங்' பட்டியல் வெளியிடப்பட்டு, மாணவர்கள் அழைக்கப்பட்டனர். விண்ணப்ப கட்டணமாக 300 ரூபாயு-ம், எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு கட்டணமின்றியும் வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு, 19,629 விண்ணப்பங்கள் விற்பனையாகின. மொத்த காலியிடங்கள், ஒரு லட்சத்து, 11 ஆயிரம். பி.எஸ்சி.,யில் கணிதம் மற்றும் கணிதத்தை துணைப் பாடமாக எடுத்தவர்கள் மட்டுமே இரண்டாம் ஆண்டில் சேர்ந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு முதல், பிளஸ் 2வில் கணிதப் பாடம் எடுத்து, பி.எஸ்சி.,யில், தாவரவியல், விலங்கியல் படித்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டது.
முதலாம் ஆண்டு இன்ஜி., சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், ஆன்லைன் மூலம் வினியோகிக்கப்பட்டதை தொடர்ந்து, இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை விண்ணப்பங்களும் ஆன்லைனில் வழங்குவதற்கான ஏற்பாடுகளை, காரைக்குடி அழகப்பா இன்ஜி., கல்லுாரியில் உள்ள இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை செயலர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
'இந்த விண்ணப்பங்கள், வரும் திங்கட்கிழமை முதல் ஆன்லைனில் கிடைக்கும்' என, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.