வரும் 17ல் பிளஸ் 2 'ரிசல்ட்': 19ல் தற்காலிக சான்றிதழ்

சென்னை,:மே, 17ல் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், 19ல் வழங்கப்படுகிறது.இது குறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர்
வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், மே, 17 காலை, 10:31 மணிக்கு வெளியிடப்படும். தேர்வர்கள், பிறந்த தேதி மற்றும் பதிவு எண் மூலம், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.பள்ளிகளிலும், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நுாலகங்களிலும் தேர்வு முடிவுகளை கட்டணமின்றி தெரிந்து கொள்ளலாம்.
தேர்வர்கள் மே, 19ல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்யலாம். மே, 21 முதல், தேர்வர்கள் தாங்கள் படித்த, தேர்வு எழுதிய பள்ளியில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெறலாம்.
விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும்; தனித்தேர்வர்கள் தேர்வு மையங்கள் மூலமும், மே, 17, 18ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே, மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்க முடியும்.
விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிப்போர், அதே பாடத்திற்கு மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாளின் நகல் பெற்ற பின், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும். விடைத்தாளின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை, விண்ணப்பிக்க உள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும்.
விடைத்தாளின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை, மாணவர் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டிலுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே, விடைத்தாள் நகலை மாணவர்கள்
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும்.சிறப்பு துணைத்தேர்வு ஜூன் மாத இறுதியில் நடக்கும். விண்ணப்ப தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.