தேர்தல் பணி உத்தரவை வாங்க மறுக்கும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை - DINAMANI

ஈரோடு: தேர்தல் பணி உத்தரவை வாங்க மறுக்கும் அரசு ஊழியர்கள் மீது துறை வாரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வியாழக்கிழமை விடுத்த செய்தி:
சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குச்சாவடிகளில் பணிபுரிய வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்வு செய்து அவர்களுக்கான பணி உத்தரவுகள் அனுப்பப்பட்டுள்ளன. மேற்படி உத்தரவுகளை வாங்க மறுத்தாலோ அல்லது பெற்றுக்கொண்டு ஏப்.24-ம் தேதி நடைபெறவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சியில் கலந்து கொள்ளாமல் இருந்தாலோ தேர்தல் விதிகளின் படியும் துறைவாரியாகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் பணி உத்தரவுகளை பெற்றுக்கொண்டவர்கள் பல்வேறு காரணங்களினால் மருத்துவச்சான்றுகளை பெற்றுக்கொண்டு தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்க கோரி பலர் விண்ணப்பித்து வருகின்றனர். இவர்களது மருத்துவ சான்றுகளை மருத்துவ குழுவுக்கு அனுப்பி உண்மை தன்மை குறித்து நன்கு ஆய்வு செய்த பின்னரே விலக்க அளிக்க பரிசீலனை செய்யப்படும் எனவும் தவறான சான்றிதழ்கள் ஏதும் கொடுக்கப்பட்டிருப்பின் அவர்கள் மீது தேர்தல் விதிகளின் படியும் துறை ரீதியாகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.