மருத்துவ படிப்புகளுக்கு இந்த ஆண்டே பொது நுழைவுத்தேர்வு கால அட்டவணையை தாக்கல் செய்ய சுப்ரிம் கோர்ட் உத்தரவு .

மருத்துவ படிப்புகளுக்கு இந்த ஆண்டே பொது நுழைவுத்தேர்வு கால அட்டவணையை  தாக்கல் செய்ய சுப்ரிம் கோர்ட்  உத்தரவு .
நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வை இந்த ஆண்டே நடத்துவதற்கு மத்திய அரசும், மருத்துவ கல்வி கவுன்சிலும் சம்மதம் தெரிவித்துள்ளன. தேர்வுக்கான கால அட்டவணையை தாக்கல் செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. மனு விவரம் நாடு முழுவதும் 2016-17-ம் கல்வி ஆண்டு மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வுகளை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும் என்று சங்கல்ப் சாரிட்டபிள் டிரஸ்ட் என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
2016-17 கல்வி ஆண்டில் மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வுகளை நடத்த முடியாத வகையில் மருத்துவ கவுன்சில் உள்ளிட்ட நிறுவனங்கள் வேண்டுமென்றே தங்கள் முடிவை தாமதப்படுத்த முயற்சிக்கின்றன. கடந்த 11-ந் தேதி அன்று சுப்ரீம் கோர்ட்டில் அரசியல் சாசன அமர்வு, இதுதொடர்பான மறுஆய்வு மனுக்கள் மீதான தீர்ப்பில் இந்த தேர்வுகளை நடத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இந்த ஆண்டிலேயே மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதேபோல சி.பி.எஸ்.இ. நிறுவனம் வரும் மே 1-ந் தேதி நடத்தும் 15 சதவீத இடங்களுக்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. சம்மதம் இந்நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அனில் ஆர்.தவே, சிவ கீர்த்திசிங், ஏ.கே.கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு சங்கல்ப் சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனம் தரப்பில் வக்கீல் அமித் குமார் ஆஜராகி இந்த மனுவை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டு இந்த ஆண்டே மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வை நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று முறையீடு செய்தார். அப்போது, மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில், சி.பி.எஸ்.இ. ஆகியவற்றின் சார்பில் ஆஜரான வக்கீல்கள் மூவரும், மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வை இந்த ஆண்டே நடத்துவதற்கு விரும்புவதாகவும், தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்தனர். சி.பி.எஸ்.இ. சார்பில் ஆஜரான வக்கீல் மட்டும், சி.பி.எஸ்.இ.யுடன் தான் ஆலோசனை நடத்தி, தேவையான உத்தரவுகளை பெற வேண்டி இருப்பதாக தெரிவித்தார். இந்த ஆண்டே நடத்த வேண்டும் அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை இன்று (வியாழக்கிழமை) ஒத்தி வைத்தனர். இந்த ஆண்டே பொது நுழைவுத்தேர்வை நடத்துவதற்கான கால அட்டவணையை இன்று பகல் 12 மணிக்கு கோர்ட்டில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர். மேலும் சி.பி.எஸ்.இ. நிறுவனத்தில் உடனடியாக முடிவெடுக்கும் பொறுப்பில் உள்ள அதிகாரி ஒருவரும் விசாரணையின்போது கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர். இதன்மூலம், இந்த ஆண்டே பொது நுழைவுத்தேர்வு நடத்துவதற்கான முட்டுக்கட்டைகள் அனைத்தும் நீங்கி விட்டதாக மனுதாரரின் வக்கீல் அமித் குமார் தெரிவித்தார்.